ஜனவரி மாதம் அனைவரும் கொண்டாடும் புத்தாண்டின் தொடக்கம் என்றால், பிப்ரவரி மாதம் உலக காதலர்களின் மாதமாக கருதப்படுகிறது.
காதலர்கள் அனைவரும் வரும் 14ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாட காத்திருக்கும் நிலையில், இன்று முதல் காதல் வாரம் துவங்குகிறது.
இன்று முதல் 14ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் காதலர்கள் காதலின் ஏழு நாட்களைக் கொண்டாடுகிறார்கள். அவை, ரோஜா தினம் (பிப்ரவரி 7), காதலை வெளிப்படுத்தும் டே (பிப்ரவரி 8), சாக்லேட் தினம் (பிப்ரவரி 9), பரிசு தினம் (பிப்ரவரி 10), வாக்குறுதி தினம் (பிப்ரவரி 11), கட்டிப்பிடித்தல் தினம் ( பிப்ரவரி 12) மற்றும் முத்த தினம் பிப்ரவரி 13).
அதன்படி காதல் வாரத்தின் முதல் நாளான இன்று (பிப்ரவரி 7) உலகம் முழுவதும் ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.
அதாவது என்றும் அழியாத அன்பின் சின்னமான ரோஜா மூலம் தங்களது அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்த இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது.
இந்த நாளில் நீங்கள் உங்கள் காதலி அல்லது காதலருக்கு அளிக்கும் ஒவ்வொரு ரோஜா நிற பூவும் ஒவ்வொரு தனித்துவமான உணர்ச்சியை வெளிப்படுத்துகிறது. அதனை இங்கு காணலாம்.
சிவப்பு ரோஜா : உங்கள் காதலின் தீவிரத்தை வெளிப்படுத்த ஒரு சக்திவாய்ந்த வழி. ஆழமான காதலின் உன்னதமான அடையாளமாக சிவப்பு ரோஜா உள்ளது.
வெள்ளை ரோஜா : புதிய காதலின் அடையாளம். வெள்ளை ரோஜாக்கள் பெரும்பாலும் இளம் காதலர்களின் தூய்மையான காதலை வெளிபடுத்துகிறது.
மஞ்சள் ரோஜா : இவை நட்பு, அரவணைப்பு மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றன. இதனை உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர்கள் என்பதை வெளிப்படுத்த அளிக்கலாம்.
இளஞ்சிவப்பு ரோஜா : இவை நன்றியுணர்வு மற்றும் பாராட்டுதலை வெளிப்படுத்துவதற்கு அறியப்படுகிறது. இதனையும் உங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு அளித்து அன்பை பகிரலாம்.
ஆரஞ்சு ரோஜா: இவை உணர்ச்சி, கவர்ச்சி, ஏக்கம் மற்றும் ஆசை ஆகியவற்றைக் குறிக்கிறது.
காதலர் தினம் உலகளவில் அன்பின் வெளிப்பாடாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னுரையாக காதலர்கள் மட்டுமின்றி தங்களது அன்பை பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் வெளிபடுத்தும் தினமாக இந்த ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது.
எனவே என்ன நிற ரோஜாவை தேர்ந்தெடுக்கலாம் என்பதை முடிவு செய்து உங்கள் விருப்பத்திற்குரியவருக்கு உங்கள் அன்பை வெளிப்படுத்தி மகிழுங்கள்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா