சினிமா உலகில் தல தளபதி ரசிகர்கள் எப்படியோ, அதேபோன்று தான் இந்திய கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ரசிகர்களும்.
யார் பெரிய கிரிக்கெட் வீரர் என்று நாள்தோறும் சமூகவலைதளங்களில் இருவரது ரசிகர்களும் முட்டி கொள்வது வாடிக்கையாக மாறியுள்ளது.
கொலையில் முடிந்த ரசிக சண்டை!
தற்போது இணைய மோதலையும் மீறி கோலியா, ரோகித்தா என்ற தகராறு வாக்குவாதத்தில் தொடங்கி கொலையில் முடிந்துள்ளது கிரிக்கெட் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கீழப்பலூர் பகுதியைச் சேர்ந்த தர்மராஜூவும் (21), விக்னேஷூம்(24) நண்பர்கள். கடந்த 11ம் தேதி இரவு இருவரும் ஒன்றாக மது அருந்திவிட்டு பேசி கொண்டிருந்தனர்.
அப்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர்? என்ற பேச்சு எழுந்துள்ளது. அப்போது விராட் கோலிக்கு ஆதரவாக தர்மராஜூம், ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக விக்னேஷும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ”ஆர்.சி.பி., எல்லாம் ஒரு அணியா, விராட் கோலி எல்லாம் ஒரு பிளேயரா” என விக்னேஷ் பேசியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த விராட் கோலி ரசிகர் தர்மராஜ், ரோகித் ரசிகரான விக்னேஷை அங்கிருந்த கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். இதில் பலத்த காயமுற்ற விக்னேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து தப்பியோடிய தர்மராஜை, கீழப்பலூர் போலீசார் மறுநாள் கைது செய்தனர்.
டிரெண்டிங்கில் கோலி!
இந்நிலையில் இந்த கொலைக்கு காரணம் விராட் கோலி தான் என்றும், அவரை கைது செய்ய கோரியும் #ArrestKohli என்ற ஹேஷ்டேகை தற்போது ரோகித் சர்மா ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த தலைமுறைக்கு என்ன ஆச்சு?
ரசிகர் ஒரு கொலை செய்ததற்கு விராட் கோலி என்ன செய்வார்? செய்யாத தவறுக்கு அவர் ஏன் கைது செய்யப்பட வேண்டும் என்று விராட் கோலி ரசிகர்கள் எதிர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையே சினிமாவோ, விளையாட்டோ எதையும் அளவோடு ரசித்தால் நல்லது. இளைஞர்கள் சமூக வலைதளங்களில் செலிபிரட்டிகளுக்காக சண்டை போடும் செயல்களை விடுத்து, ஆக்கப்பூர்வமான வழியில் தங்கள் வாழ்வில் முன்னேற உழைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
”ஹாக்ரிட் சிரிக்க வைத்து கொண்டே இருப்பார்”: ராபி கோல்ட்ரேன் மறைவுக்கு ஹாரிபாட்டர் இரங்கல்!
”பீகார் வழியில் தமிழகத்திலும் குடிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்” – சீமான்