இந்தியாவில் உள்ள சில பழக்கவழக்கங்கள் மற்றும் சடங்குகளை வெளிநாட்டினர் வினோதமாக பார்ப்பது உண்டு.
அதில் ஒன்று கோமாதா என்றழைக்கப்படும் பசு வழிபாடு. உலகம் முழுவதும் பசுவை வெறும் விலங்காகவும், உணவுப்பொருளாகவும் மட்டும் பார்க்கும்போது இந்தியா, நேபாளம் உள்ளிட்ட சில குறிப்பிட்ட நாடுகளில் கடவுளாகவும் மதிக்கப்படுகிறது.
2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் வடமாநிலங்களில் பசு வழிபாடு, பசு பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து நாட்டில் பிரதமர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட தயாராகி வரும் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக், பசுமாட்டுக்கு வழிபாடு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, புதிய பிரதமருக்கான தேர்தலை ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தி வருகிறது.
இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனக் மற்றும் வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இருவரும் தங்களுக்கு ஆதரவு திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக இந்திய வம்சாவளியான ரிஷி, தனது கட்சியில் உள்ள இந்தியர்களை கவர, இந்தியில் பேசி வாக்கு சேகரித்து வருகிறார்.
மேலும் பகவத் கீதைதான் தனக்கு பலம் கொடுக்கிறது என்று கூறி வாக்கு சேகரித்து வருகிறார்.
கோமாதா வழிபாடு!
சமீபத்தில் கிருஷ்ணர் ஜெயந்தியை உலகம் முழுவதும் இந்தியர்கள் கொண்டாடினர். அதன்படி இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளர் ரிஷி சுனக்கும், அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் சேர்ந்து லண்டனில் பசு மாட்டுக்கு ‘கோ பூஜை’ செய்தனர்.
லண்டனில் உள்ள பக்திவேதாந்தா மனோர் கோவிலில் வைத்து இந்த பசுமாடு வழிபாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.
பூஜையின் போது பசு மாட்டிற்கு ஆரத்தி காண்பித்து குங்குமம் வைத்து ரிஷி சுனக்கும், அக்ஷதா மூர்த்தியும் வழிபட்டனர்.
கொல்லப்படும் பசுமாடுகள்!
மாட்டு கறியை விரும்பி உண்ணும் இங்கிலாந்தில் ஓவ்வொரு ஆண்டும் சராசரியாக 20 லட்சம் மாடுகள் உணவுக்காக கொல்லப்படுகின்றன.
இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் ரிஷி சுனக், தனது மனைவியுடன் சேர்ந்து பசுமாடு வழிபாடு நடத்திய வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் வைரலாகி வருகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
இங்கிலாந்து பிரதமராக முயலும் இந்திய வம்சாவளிஅரசியல்வாதி!