அதிகாரிகளுக்கு பயந்து லஞ்சமாக பெற்ற பணத்தை வருவாய் துறை அதிகாரி விழுங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டம் பர்கேடா கிராமத்தைச் சேர்ந்த சந்தன் சிங் லோதி, தனது தாத்தா பெயரில் உள்ள நிலத்தை மாற்றுவதற்காக வருவாய் துறை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு வருவாய்த் துறை அதிகாரியாக இருந்த கஜேந்திர சிங் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார்.
இதனால் சந்தன் சிங் லோதி ஜபால்பூர் லோக் ஆயுக்தா போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசாரின் அறிவுரைப்படி ரசாயணம் தடவிய பணத்தை சந்த சிங் லோதி வருவாய் துறை அதிகாரியிடம் லஞ்சமாக வழங்கியுள்ளார். மொத்தமாக 10 ரூ.500 நோட்டுகளை கொடுத்துள்ளார்.
கஜேந்திர சிங் பணத்தை வாங்கும் போது, போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டார். ஆனால் கஜேந்திர சிங் லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை நெருங்குவதற்கு முன் ஆதாரத்தை அழிக்க வேண்டும் என்று லஞ்சமாகப் பெற்ற பணத்தை மென்று விழுங்கிவிட்டார். அதிகாரிகள் விழுங்கிய பணத்தை கீழே துப்புமாறு கூறியுள்ளனர்.
லஞ்சம்… போலீஸை கண்டதும் பணத்தை மென்று விழுங்கிய அதிகாரி! #Minnambalam #madhyapradesh #Money #GovtStaff #TrendingReels pic.twitter.com/GH4xUHVrAX
— Minnambalam (@Minnambalamnews) July 25, 2023
மேலும் லோக் ஆயுக்தா அதிகாரிகள் உடனே அவரை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்று அவரிடம் இருந்த 9 நோட்டுகளை அதிகாரிகள் முழுமையாக கைப்பற்றினர். அதில் ஒரு ரூ.500 நோட்டை மட்டும் கஜேந்திர சிங் முழுவதுமாக மென்று கீழே துப்பியுள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கஜேந்திர சிங் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் மீது லோக் ஆயுக்தா அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
‘இந்தியா’ கூட்டணிக்கு பெயர் வைத்தது யார்?
‘இந்தியா’ : மோடிக்கு ராகுல் பதில்!