மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களில் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு பாக்டீரியா இருப்பதாக ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வாட்டர்பில்டர்குரு.காம், சமீபத்தில் பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தும் ஸ்பூட் மூடி, ஸ்கூரு டைப் மூடி, ஸ்ட்ரா மூடி, ஸ்கூயிஸ் மூடி என 4 வகையான தண்ணீர் பாட்டில்களை ஆராய்ச்சி செய்தது.

2 வகை பாக்டீரியா
ஒவ்வொரு பாட்டிலையும் மூன்று முறை கழுவி ஆய்வு செய்தபோது, அவற்றில் ’கிராம் நெகட்டிவ்’ மற்றும் ’பேசிலஸ்’ என இரண்டு வகையான நோய் உண்டாக்கும் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
பாட்டிலில் இருக்கக்கூடிய கிராம் நெகட்டிவ் பாக்டீரியா, நோய் எதிர்ப்பு அணுக்களுக்கு எதிராக செயல்பட்டு உடலில் பாதிப்பை ஏற்படுத்தும். பேசிலஸ் பாக்டீரியா, இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்று தன்மையுடையவை.
கழிவறை இருக்கையை விட அதிகம்
மேலும் தண்ணீர் பாட்டில்களில் உள்ள பாக்டீரியாவை வீட்டில் உள்ள பொருட்களுடன் ஒப்பிட்டதில் பல அதிர்ச்சி முடிவுகள் வெளியாகி உள்ளன.
அதன்படி சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டியை விட இரண்டு மடங்கும், கம்யூட்டர் மவுஸை விட நான்கு மடங்கும், செல்லப்பிராணிகள் குடிக்கும் தண்ணீர் கிண்ணத்தை விட 14 மடங்கும் தண்ணீர் பாட்டில்களில் பாக்டீரியாக்கள் உள்ளன. அனைத்திற்கு மேலாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டில்களில் கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு அதிக பாக்டீரியா இருப்பது தெரிய வந்துள்ளது.

மேலும் ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட தண்ணீர் பாட்டில்களில் ஸ்கூயிஸ் மூடி வகை பாட்டில் தான் சோதனை செய்யப்பட்ட மற்றவற்றை விட தூய்மையானவை என்று தெரியவந்துள்ளது.
ஆபத்தானது அல்ல
அதேவேளையில் பாட்டில்கள் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்களை இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருந்தாலும், அது ஆபத்தானது அல்ல” என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியலாளர் டாக்டர் சைமன் கிளார்க் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “தண்ணீர் பாட்டில் காரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. அதேபோல், குழாய்களில் தண்ணீர் குடித்தும் ஒருவர் நோய்வாய்ப்பட்டதாக நான் கேள்விபட்டதில்லை. அதே வேளையில், மனிதனின் வாயில் உள்ள பாக்டீரியாக்களால் தான் தண்ணீர் பாட்டில்கள் மாசடைகின்றன” என்று சைமன் கிளார்க் கூறினார்.
லண்டன் இம்பீரியல் கல்லூரி மூலக்கூறு நுண்ணுயிரியலாளர் டாக்டர் ஆண்ட்ரூ எட்வர்ட்ஸும் “மனிதரின் வாயில் தான் அதிக எண்ணிக்கையிலான பாக்டீரியாக்கள் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய பாட்டில்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சூடான சோப்பு நீரில் கழுவவும், வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தப்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
மனைவியும் குழந்தையும்: ஸ்ரீதர் வேம்பு தரும் விளக்கம்!
வருமான வரி செலுத்துவோருக்கு கடைசி வாய்ப்பு: செய்ய வேண்டிய முக்கிய வேலைகள்!