நள்ளிரவில் வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிய ரேபிடோ ஓட்டுநர் மீது பெண் ஒருவர் அளித்த புகார் இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் 13ஆம் தேதி இரவு 11.15மணிக்கு ரேபிடோவில் பைக் டாக்ஸியை பூக் செய்துள்ளார். இதற்காக அவர் வாட்ஸ் அப் மூலம் அவர் இருந்த இடத்தின் முகவரியை அனுப்பியுள்ளார்.
அந்த பெண் அனுப்பிய முகவரிக்கு வந்த ரேபிடோ ஓட்டுநர், அந்த பெண்ணை ஏற்றிக் கொண்டு அவர் குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டுள்ளார்.
பின்னர், நள்ளிரவில் அந்தபெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ரேபிடோ ஓட்டுநர் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், ”உங்களது குரலைக் கேட்டு, உங்கள் வாட்ஸ் அப் ‘டிபி’யில் உள்ள புகைப்படத்தை பார்த்துதான் பிக் அப்பிற்கு வந்தேன். இல்லையென்றால் வந்திருக்க மாட்டேன்” என்று கூறியுள்ளார்.
இந்த குறுஞ்செய்தியின் ஸ்கிரீன்ஷாட்டை அந்த பெண் “husnpari” என்ற ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, ரேபிடோ ஓட்டுநர் மீதான தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அந்த பெண்ணின் ட்விட்டர் பதிவிற்குப் பதிலளித்துள்ள ’ரேபிடோ கேர்ஸ்’, “ஹாய், எங்களது ஓட்டுநரின் நடவடிக்கை தொடர்பான குறைபாடு குறித்து அறிந்து கொள்வது எங்களுக்கு மிகவும் வருத்தமளிக்கிறது.
அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இந்த விவகாரத்தில் முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
தயவு செய்து நீங்கள் பதிவு செய்த மொபைல் எண் மற்றும் சவாரி ஐடியை பகிர்ந்து கொள்வீர்களா?” என்று கேட்டுக் கொண்டுள்ளது.
பெண்ணின் துணிச்சலான பதிவிற்கு ட்விட்டர் பயனர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக ஒரு பயனர், “இந்த காலத்தில் ரேபிடோ பாதுகாப்பானது இல்லை” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “அமேசான் அல்லது ஃபிளிப்கார்ட், ஓலா அல்லது உபெர் ஆகிய ஆப்கள் மூலம் அடையாளம் தெரியாத நபருக்கு உங்கள் இருப்பிடத்தை தெரியப்படுத்துவது என்றுமே பிரச்சனை தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அந்த பெண்ணின் ஸ்க்ரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா
நெஞ்சுவலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி!
தி.நகர் பத்மாவதி தாயார் கோயிலில் நாளை கும்பாபிஷேகம்!