மாலை நேர ஸ்நாக்ஸில் ஓமப்பொடிக்குத் தனியிடம் உண்டு என்றாலும் அதிகம் சாப்பிட்டால் வயிற்றில் பிரச்சினையை ஏற்படுத்தும் என்பதற்காக யோசிப்பார்கள். இந்த நிலையில் சுவையில் மட்டுமல்ல… ஆரோக்கியத்திலும் அசத்தும் இந்த புதினா ஓமப்பொடி செய்து கொடுங்கள். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்.
என்ன தேவை?
கடலை மாவு – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
வெண்ணெய் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
அரைக்க:
புதினா இலைகள் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
ஓமம் – ஒரு டீஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
மிக்ஸியில் புதினா, பச்சை மிளகாய், ஓமம், தண்ணீர் சேர்த்து அரைத்து, வடிகட்டிக்கொள்ளவும். பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, உப்பு, வெண்ணெய் போட்டு நன்றாகக் கலந்துகொள்ளவும். பின்னர், புதினா அரைத்த தண்ணீரைச் சிறிது சிறிதாக ஊற்றிப் பிசைந்துகொள்ளவும். முறுக்கு பிழியும் குழலில் ஓமப்பொடி அச்சைப் போட்டுப் பிசைந்த மாவை வைத்து ஓமப்பொடியாகச் சூடான எண்ணெயில் பிழிந்து எடுக்கவும் (மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். இல்லையென்றால் ஓமப்பொடி கருகிவிடும்). ஆறியவுடன் நொறுக்கி காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.
குறிப்பு: அரைத்த விழுதை அப்படியே மாவில் சேர்த்துப் பிசைந்தால் அது ஓமப்பொடி அச்சில் மாட்டிக்கொண்டு பிழிய வராது. அதனால் அரைத்த விழுதை வடிகட்டிக்கொள்ளவும். ஓமம் சேர்க்காமல் வெறும் புதினா மட்டும் சேர்த்தும் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: தாமரை விதை கீர்!
கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: ‘அது இல்லன்னா… இது’ – அசத்தலாம் வாங்க!