காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தில், பிரியங்கா காந்தியின் செல்ல பிராணியான லூனா பங்கேற்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது.
நூறு நாட்களைக் கடந்து தற்போது ஹரியானா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ராகுல் காந்தியின் யாத்திரையில் பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என யாராவது இணைவது வழக்கமாகவே உள்ளது.
இந்த யாத்திரையில் ராகுல் சிறுவர்களுடன் விளையாடுவது, ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்பது, செல்லப்பிராணிகளுடன் கொஞ்சி விளையாடுவது,
அந்தந்த மாநில விழாக்களில் பங்கேற்பது என பல சுவாரசிய சம்பவங்களும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகும்.
அந்த வகையில் இன்று (ஜனவரி 7) ஹரியானாவில் நடந்த ராகுல் காந்தியின் யாத்திரையில் தனது சகோதரியும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் வளர்ப்பு நாயான லூனா இணைந்து கொண்டது.
இந்த புகைப்படத்தை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதில், “நீங்கள் (ராகுல் காந்தி) மற்ற செல்லப் பிராணிகளுடன் அன்பை பகிர்ந்து கொள்வதை லூனா இதுவரை அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது.
ஆனால் பொறுத்தது போதும் என்று முடிவு எடுத்து தற்போது யாத்திரைக்கு வந்துவிட்டது. லூனாவுக்கு கொஞ்சம் பொறாமை.
உங்களுடைய பாசத்தை மற்ற யாருடனும் பகிர்ந்து கொள்ள அது விரும்பவில்லை. உன்னை பற்றி எங்களுக்கு புரிந்து விட்டது லூனா” என்று பதிவிடப்பட்டுள்ளது.
லூனா பிரியங்கா காந்தியின் செல்ல நாய் என்றாலும் ராகுல் காந்தியின் அதிக பாசத்தை பெற்றது.
இந்த நிலையில் ராகுல் காந்தியுடன் லூனா இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ள பிரியங்கா காந்தி ‘லூனா கடத்தப்பட்டது’ என்று நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளார்.
பிரியா
விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்தவர் கைது: பணி நீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்!