ஒவ்வொருமுறையும் பிரதமர் மோடி அணியும் ஆடைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
அதன்படி நேற்று(ஏப்ரல் 9) கர்நாடகா மாநிலத்தில் உள்ள பந்திப்பூர் தேசிய பூங்கா மற்றும் முதுமலை புலிகள் சரணாலயத்திற்கு சென்றபோது அவர் அணிந்திருந்த ‘டீ சர்ட்’ இணையத்தில் பேசுபொருளானது.
இதனிடையே, பிரதமர் மோடி அணிந்திருந்த ஆடை எங்கு தயாரிக்கப்பட்டது என்று அனைவரும் தேட ஆரம்பித்தனர்.
இந்நிலையில், அந்த ஆடைகள் நமது தமிழ்நாட்டின் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்படும் திருப்பூரில் உள்ள ’எஸ்சிஎம்’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து பேசிய எஸ்சிஎம் நிறுவனத்தினர்,” பிரதமர் மோடி அணிந்திருந்த டீ சர்ட் நாங்கள் தயாரித்தது தான். கர்நாடகாவில் எங்கள் நிறுவனத்தை சேர்ந்த 15 டீ சர்ட்டுக்களை பிரதமர் மோடியின் டீமை சேர்ந்தவர்கள் வாங்கி உள்ளனர்.
அதில் ஒன்றை தான் பிரதமர் மோடி தேர்வு செய்து அணிந்திருந்தார். இது எங்கள் நிறுவனத்திற்கு பெருமைமிக்க தருணம் ஆகும்” என்று கூறுகிறார்கள்.
தமிழக பாஜக தொழிற்பிரிவு தலைவர் செல்வகுமார் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நமது பிரதமர் மோடி அணிந்திருந்த Camo Tee டீ சர்ட் எஸ்சிஎம் கார்மென்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் – சென்னை சில்க்ஸ் குழுமத்தின் தயாரிப்பு ஆகும்.
இது எஸ்சிஎம்முக்கு மட்டும் பெருமையான தருணம் அல்ல திருப்பூருக்கு பெருமையான தருணம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் கடந்த பிப்ரவரி மாதம் பாராளுமன்றத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட போது நீல நிறத்திலான ஜாக்கெட் அணிந்து இருந்தார்.
இது பிளாஸ்டிக் பாட்டில் கொண்டு மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட ஜாக்கெட் என்பதும் இது கரூர் அருகே காக்காவாடியில் உள்ள ரெங்கா பாலிமர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
பல் பிடுங்கிய விவகாரம்: யாரும் ஆஜராகவில்லை!
‘லால் சலாம்’ படப்பிடிப்பு நிறைவு: படக்குழு அறிவிப்பு!