அசாம் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு போர் விமானத்தில் பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசாம் மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஏப்ரல் 6 ஆம் தேதி அசாம் மாநிலத்திற்கு சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பல்வேறு முக்கிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
குறிப்பாக நேற்று (ஏப்ரல் 7) காஜிரங்கா தேசிய பூங்காவில் ‘காஜ் உத்சவ்-2033’ விழாவில் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவுகாத்தி உயர்நீதிமன்றம் தொடங்கப்பட்டதன் 75வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு குடியரசுத் தலைவர் உரையாற்றினார்.
தொடர்ந்து 3வது நாள் பயணமான இன்று (ஏப்ரல் 8) தேஜ்பூர் விமானப்படை நிலையத்திற்கு சென்றார். அங்கு விமானப் படை அதிகாரிகளுடன் இணைந்து போர் விமானங்களை திரவுபதி முர்மு பார்வையிட்டார். அப்போது இந்திய விமானப்படையின் செயல்பாடு குறித்து அதிகாரிகள் குடியரசுத் தலைவருக்கு விளக்கம் அளித்தனர்.
பின்னர், மணிக்கு 2,120 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் சுகோய் 30 எம்.கே.ஐ. போர் விமானத்தில் திரவுபதி முர்மு பறந்தார். விமானத்தை 106 படைப்பிரிவின் சிஒ ஜிபி கேப்டன் நவீன் குமார் இயக்கினார். விமானம் கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டு கிமீ உயரத்திலும் மணிக்கு சுமார் 800 கிமீ வேகத்திலும் பறந்தது.
இதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் விமானப்படை அதிகாரிகள் மேற்கொண்டிருந்தனர்.
திரவுபதி முர்மு போர் விமானத்தில் பறந்தது குறித்து குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை நிலையத்தில் சுகோய் 30 எம்கேஐ போர் விமானத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரலாற்று சிறப்பு மிக்க பயணம் மேற்கொண்டார். குடியரசுத் தலைவர் முர்மு இது போன்ற ஒரு முயற்சியை மேற்கொண்ட மூன்றாவது குடியரசுத் தலைவர் மற்றும் இரண்டாவது பெண் குடியரசுத் தலைவர் ஆவார்” என்று குறிப்பிட்டுள்ளது.
மேலும் இந்த அனுபவம் குறித்து திரவுபதி முர்மு பார்வையாளர் பதிவேட்டில், “இந்தப் பயிற்சியை ஏற்பாடு செய்ததற்காக இந்திய விமானப்படை மற்றும் தேஜ்பூர் விமானப்படை குழுவையும் வாழ்த்துகிறேன்.
இந்திய விமானப்படையின் வலிமைமிக்க சுகோய்-30 எம்கேஐ போர் விமானத்தில் பறந்தது எனக்கு ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது. நிலம், வானம் மற்றும் கடல் ஆகிய அனைத்து எல்லைகளையும் உள்ளடக்கும் வகையில் இந்தியாவின் பாதுகாப்பு திறன்கள் அபரிமிதமாக விரிவடைந்திருப்பது பெருமைக்குரிய விஷயம்” என்று எழுதினார்.
போர் விமானத்தில் கம்பீரமாகப் பயணம் செய்த திரவுபதி முர்முவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மோனிஷா