வீட்டுக்கு வரும் விருந்தினர்களை அசத்த… வீட்டிலுள்ளவர்களுக்கு விருந்து படைக்க… வித்தியாசமான, சுவையான, சத்தான ஸ்நாக்ஸ்க்கு இந்த இறால் வடை உதவும். சாப்பிட்டு முடித்த பிறகு இந்த வடையைச் சாப்பிட்டவர்கள் எப்படி, எதை வைத்து செய்தீர்கள் என்று நிச்சயம் கேட்பார்கள்.
என்ன தேவை?
சின்ன இறால் – ஒரு கிலோ
நறுக்கிய வெங்காயம் – 200 கிராம்
இஞ்சி – 10 கிராம்
பூண்டு – 50 கிராம்
தக்காளி – 100 கிராம்
பச்சை மிளகாய் – 5 (நறுக்கவும்)
மிளகாய்த்தூள் 10 கிராம்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 5 கிராம்
மஞ்சள்தூள் – 10 கிராம்
சோம்பு – 5 கிராம்
கறிவேப்பிலை – சிறிதளவு
பொட்டுக்கடலை – 150 கிராம்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சோம்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு வதக்கவும். அதன்பின் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம் வதக்கி, பின்னர் நறுக்கிய இஞ்சி, பூண்டு போட்டு வதக்கவும். பிறகு, நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கிய பின் மஞ்சள்தூள், தனியாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, பின் கழுவிவைத்திருக்கும் இறால் மீன்களைப் சேர்த்து நன்றாக வதக்கவும். வதக்கும்போதே தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்றாக வதக்கிய பின் இதை இறக்கி வைத்துவிட்டு பொட்டுக்கடலையை பவுடராக்கி இத்துடன் சேர்க்கவும். வடைக்குத் தேவையான மாவு போல் இதை நன்கு பிசையவும். மாவை சூடான எண்ணெயில் வடைகளாகப் போட்டு சுட்டெடுத்தால் இறால் வடை தயார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: இந்த சீசனுக்கு எந்தெந்த காய்கறி, பழங்களைச் சாப்பிடலாம்?