டெல்லி பல்கலைக்கழக நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 30) கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தின் விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள பல்நோக்கு அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
பல்கலைக்கழகத்தின் அழைப்பை ஏற்றுக் கலந்து கொண்ட பிரதமர் மோடி மாணவர்களிடையே உரையாற்றினார். பின்னர் பல்கலைக்கழகத்தின் கணினி மையம், அகாடமி கட்டிடம் மற்றும் பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் கட்டப்படவுள்ள கல்வித் தொகுதிக்கு அடிக்கல் நாட்டினார்.
முன்னதாக இந்த பல்கலைக்கழக விழாவிற்கு பிரதமர் காரிலோ, ஹெலிகாப்டரிலோ வந்து இறங்குவார் என்று பார்த்தால், டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வந்துள்ளார்.
மோடி மெட்ரோவில் பயணம் செய்யும் போது ரயிலில் இருந்த சக பயணிகளுடன் உரையாடிக் கொண்டே சென்றார். சக பயணிகளும் அவருடன் அமர்ந்து பயணம் செய்தனர்.
நாட்டின் பிரதமர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
மோனிஷா