இன்றைய இயந்திர உலகில் வேலையே வாழ்க்கையாகிவிட்டது எனலாம். 2021 தரவுப்படி உலகில் அதிக வேலை நேரம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 5ஆவது இடத்தில் இருக்கிறது.
தினசரி வேலை நேரம் 8-10 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். வாராந்திர பணி நேரம் 48 மணி நேரத்துக்குள் இருக்க வேண்டும். ஓவர் டைம் எனப்படும் கூடுதல் நேரம் வேலை செய்தாலும் கூட வாராந்திர நேர வரம்பு 50-60க்குள் இருக்க வேண்டும். 30 நிமிட இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்யக் கூடாது என சட்டவிதிகள் இருக்கின்றன.
ஆனால் கார்ப்பரேட் அலுவலகங்கள், குறிப்பாக ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அதிக நேரம் வேலை வாங்குவதும், குறிப்பிட்ட டார்கெட்டை முடிக்க வேண்டும் என்று ஊழியர்கள் அதிக நேரம், கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை செய்வதும் பல இடங்களில் நடக்கிறது.
இதனால் தூக்கமின்மை, மன அழுத்தம், பதட்டம் என மன ரீதியான பாதிப்பையும், முதுகு வலி, தலைவலி, சோர்வு, உடல்பருமன் என உடல் ரீதியான பாதிப்பையும் ஊழியர்கள் எதிர்கொள்கின்றனர்.
இதுமட்டுமின்றி குடும்பத்தினரோடு நேரம் செலவிட முடியாத நிலைக்கு தள்ளப்படுவதாக ஐடி ஊழியர்கள் புலம்புவதையும் காணமுடிகிறது. இன்றைய நிலவரப்படி வேலைக்குச் செல்லும் பணியாளர்களின் நிலைமை வாழ்க்கையில் வேலையைத் தவிர வேறு எதுவும் இல்லை என்ற அளவுக்கு இருக்கிறது.
இதனால் அன்றாட வேலை அல்லது மாதாந்திர ஊதியத்துக்கு வேலை செய்யும் பணியாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.

அப்படித் தனிப்பட்ட வாழ்க்கை உள்ளிட்ட காரணங்களைக் கொண்டு உலகின் 146 நாடுகளில் மகிழ்ச்சியான நாடுகள் எது என ஆய்வு எடுக்கப்பட்டது. sustainable development solutions network எடுத்த ஆய்வில் இந்தியா மகிழ்ச்சியற்ற நாடாக 139ஆவது இடத்தில் இருக்கிறது.
இதுபோன்ற சூழலில் தான் மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் சாப்ட்க்ரிட் ஐடி நிறுவனம் தங்களது ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறது.
சாப்ட்க்ரிட் என்பது வலை (வெப்) வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனமாகும். மொத்தம் 15 நாடுகளில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் 15 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
இந்நிறுவனம் ஊழியர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும், தொழில் வாழ்க்கைக்கும் இடையேயான சமநிலையைப் பராமரிக்கும் நோக்கத்தில் எடுத்த முடிவு, அந்த நிறுவனத்தின் ஊழியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
வேலை நேரத்தைத் தாண்டி அலுவலகத்தில் நேரம் செலவிடக் கூடாது என்பதற்காக சாப்ட்க்ரிட் நிறுவனம் ஊழியர்களின் கணினிகளில் ஒரு சாப்ட்வேரை நிறுவியுள்ளது.
அந்த சாப்ட்வேர் வேலை நேரம் முடிந்ததும் தானாகவே கணினியை ஷட் டவுன் ஆகும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தகவலைத் தனது சமூக வலைதளத்தில் அந்நிறுவனத்தில் ஹெச்.ஆர். பிரிவில் வேலை செய்யும் தன்வி கண்டேல்வால் என்பவர் பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில், தன்வி வேலை செய்துகொண்டிருக்கும் போதே கம்ப்யூட்டர் ஸ்க்ரீனில் ஒரு எச்சரிக்கை குறிப்பு தோன்றுகிறது.
அதில், “எச்சரிக்கை… உங்கள் வேலை நேரம் முடிவடைகிறது. இன்னும் 10 நிமிடங்களில் கணினி ஷட் டவுன் ஆகிவிடும். ப்ளீஸ் நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைப் பகிர்ந்துள்ள தன்வி, “விளம்பரத்துக்காக இதைப் பதிவிடவில்லை. இதுதான் எங்கள் அலுவலகத்தின் உண்மை நிலை. எங்களது முதலாளி தனிப்பட்ட வாழ்க்கையையும், தொழில் வாழ்க்கையையும் பராமரிக்கிறார்.
எங்கள் நிர்வாகம் இந்த நினைவூட்டலைக் கணினியில் அப்டேட் செய்துள்ளது. வேலை நேரம் முடிந்ததும் தானாகவே ஆப் ஆகிவிடும்.
வேலை நேரத்தைத் தாண்டி எங்களுக்கு அழைப்புகளோ, மின்னஞ்சல்களோ வராது. உண்மையில் இது அற்புதம் இல்லையா?. மகிழ்ச்சியான வேலை சூழலில் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தன்வியின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. லிங்கிடினில் பதிவிடப்பட்ட இந்த பதிவுக்கு 3.2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். 6,235 பேர் கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த கமெண்ட்டில் பலர் எங்கள் நிறுவனத்தில் இதுபோன்று இல்லையே என புலம்பி வருகின்றனர்.
அதோடு, “என் வாழ்க்கை, என் மகிழ்ச்சி”, “இந்த பணி கலாச்சாரத்தை விரும்புகிறேன்”, “எவ்வளவு அருமையான விஷயம்”, “சிறந்த முயற்சி” என இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிரியா
மகா சிவராத்திரி: இறைச்சி விற்பனைக்கு தடை!
“ஏடிஎம் கொள்ளையில் 10 பேரிடம் விசாரணை”: ஐஜி கண்ணன்