உயிரிழந்த எஜமானர்… உடல் அருகே 48 மணி நேரம் காத்து உதவிய நாய்!

Published On:

| By Kavi

Pet dog guards bodies of 2 trekkers

டிரெக்கிங் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த எஜமானர் உடல் அருகே 48 மணி நேரம் காத்து மீட்க உதவிய நாய் பற்றிய தகவல் வெளியாகி அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில், 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ள பிர் பில்லிங் மலையேற்றம், பாராகிளைடிங் செய்வதற்கு பிரசித்திப் பெற்ற இடமாகும்.

இதில், மலையேற்றம் செய்வதற்காக பஞ்சாப்பின் பதான்கோட்டைச் சேர்ந்த அபிநந்தன் குப்தா (30), புனேவைச் சேர்ந்த பிரணிதா வாலா (26) உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட குழு ஒன்று, காரில் மலையேற்றம் செய்திருக்கிறது.

அப்போது, கார் நடுவழியில் செங்குத்தான மலை மீது ஏற முடியாமல் திணறியதால், திட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

ஆனால், அபிநந்தன் குப்தா, பிரணிதா வாலா ஆகிய இருவர் மட்டும், தனியே மலையேறியிருக்கிறார்கள். அவர்களுடன் பிரணிதாவின் வளர்ப்பு நாயான ஜெர்மன் ஷெப்பர்ட் ஒன்றும் சென்றிருக்கிறது.

இதற்கிடையில், மலையேற்றம் சென்றவர்கள் நீண்ட நேரமாக திரும்பவில்லை என்பதால், பதற்றமடைந்த மலையேற்றக் குழுவினர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, அவர்களைத் தேடுவதற்காகத் தனிப்படை அனுப்பப்பட்டது.

இந்த நிலையில் பாராகிளைடர்கள் புறப்படும் இடத்திலிருந்து கீழாக மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருவரின் உடல்களும் மீட்கப்பட்டிருக்கின்றன.

இந்த மீட்பு நடவடிக்கை குறித்துப் பேசிய காவல்துறை அதிகாரி பகதூர், “இது ஒரு செங்குத்தான பகுதி. கடும் பனிப்பொழிவால் பாதைகள் வழுக்குகின்றன. அவர்கள் வழுக்கி விழுந்ததாகத் தெரிகிறது. அதிலிருந்து எழுந்திருக்க முயன்று, மீண்டும் வழுக்கி விழுந்து உயிரிழந்திருக்கிறார்கள். அவர்கள் இறந்து இரண்டு நாட்கள் ஆகியிருக்கலாம். அவர்களின் உடல்களுக்கு அருகிலிருந்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் குரைத்துக் கொண்டே இருந்ததால்தான், எங்களால் அந்த சத்தத்தை வைத்து விரைவாக அந்தப் பகுதிக்குச் செல்ல முடிந்தது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

காங்க்ரா மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு, வானிலை வேகமாக மாறிவருகிறது. எனவே, சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் வாசிகள் அல்லது இந்தப் பகுதியைப் பற்றித் தெரிந்த வழிகாட்டி ஒருவருடன் வர வேண்டும். வழித்தடங்கள் பனியால் மூடப்பட்டிருக்கிறது. மேலும், மோசமான இணைப்பு காரணமாக செல்போன்களாலும் எந்தப் பயனும் இல்லை என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்” என எச்சரித்திருக்கிறார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

கிச்சன் கீர்த்தனா: இந்தியன் ஸ்டைல் பாஸ்தா

நான் அடிச்சா தாங்கமாட்டே… அப்டேட் குமாரு

டிஜிட்டல் திண்ணை: இரட்டை இலை சின்னத்துக்கு ஆபத்தா? எடப்பாடி முடிவில் மாற்றம்!

தேர்தல் சர்வே : திமுக கூட்டணி 39/39, அதிமுக 0

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel