சிரிப்பதற்கும், அழுவதற்கும்கூட ஒரு நாடு தடையை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளுக்கு எல்லாம் கிலியை ஏற்படுத்தி வருகிறது வடகொரியா. இந்த நாட்டுத் தகவல்கள் அவ்வளவு எளிதில் கசிய வாய்ப்பில்லை. காரணம், அந்த நாட்டின் கட்டுப்பாடுகள் அப்படி.
என்றாலும், இந்த உலகத்தை தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைப்பதில் முன்னணி நாடாக வடகொரியா திகழ்கிறது.
அதிலும் அடிக்கடி ஏவுகணைகளை ஏவி அண்டைநாடான தென்கொரியா, ஜப்பான், வல்லரசு நாடான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளையே அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.
இதனால், அந்த நாட்டிற்குப் பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டாலும் அதைப் பற்றி வடகொரியா கவலைப்படுவதில்லை.
தொடர்ந்து ஏவுகணைகளை ஏவி வருகிறது. சமீபத்தில்கூட இரண்டு ஏவுகணைகளை ஏவியிருந்தது.
இந்த நிலையில், மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கடுமையான கட்டுப்பாடுகளை வடகொரியா அரசு விதித்துள்ளது. தற்போது வடகொரியா நாட்டு அதிபராக கிம் ஜாங் வுன் உள்ளார்.
இவருடைய தந்தை கிம் ஜாங் இல்லின் 10ஆம் ஆண்டு நினைவுதினம் அந்நாட்டில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
இதை முன்னிட்டு, கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் 11 நாள்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
எனவே, இந்த 11 நாள்களுக்கும் மக்கள் சிரிக்கக் கூடாது என்று மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு பல ஆண்டுகாலமாக அங்கு அமலில் உள்ளது.
என்றாலும், இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால்கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, 11 நாள்களுக்குப் பிறகே அவரது இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என கடுமையான தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக்கூட கொண்டாட முடியாது என அந்நாட்டு ஊடகங்கள் மேற்கொள் காட்டியுள்ளன.
இதுதவிர, மது அருந்தக்கூடாது; மக்கள் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கக்கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, அந்நாட்டு மக்கள் வெளிநாட்டுப் படங்களைப் பார்த்தாலோ, உடைகளை அணிந்தாலோ, அவற்றின் மொழி வழக்கைப் பயன்படுத்தினாலோ கடுமையான தண்டனை வழங்கப்படும்.
அதிலும் தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளின் திரைப்படங்கள், நாடகங்கள் போன்றவற்றை யாராவது அதிக அளவில் வைத்திருந்தால் அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படும். அத்தகைய படங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது பிடிபட்டால் 15 ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டும்.
இதுபோக அந்த நாட்டில், இன்டர்நெட், சமூக வலைத்தளங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.
அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சில தொலைக்காட்சிகளில் அரசு என்ன விரும்புகிறதோ அதை மட்டுமே பார்க்க முடியும் என்று சொல்லப்படுகிறது. நினைத்தாலே நெஞ்சு பதைபதைக்கிறது.
ஜெ.பிரகாஷ்
மதுரை சரவணா ஸ்டோருக்கு தடைகேட்டு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு!
சொத்து குவிப்பு வழக்கு : எஸ்.பி. வேலுமணி அப்பீல்!