9 மணி நேரம் நடைபெற்ற அறுவைசிகிச்சையில் நோயாளியே இசைக்கருவியை வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இசைக்கு மயங்காதவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. அதுபோல், இசையாலும் நோய்களைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு சமீபத்திய உதாரணம், இத்தாலியில், இசைக்கலைஞர் ஒருவருக்கு மூளையில் அறுவைச்சிகிச்சை செய்யப்பட்டது.
அப்போது அவர் படுத்துக்கொண்டு சாக்ஸோபோன் (saxophone) வாசித்துக் கொண்டிருக்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
ரோமில் உள்ள பீடியா சர்வதேச மருத்துவமனையில் கிட்டத்தட்ட, 9 மணி நேரம் இந்த அறுவைசிகிச்சை நடைபெற்றது.
நோயாளி, விழித்திருந்தால்தான் அந்த அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்யமுடியும் என்று மருத்துவர்கள் சொல்ல, அதற்கு நோயாளியே 9 மணி நேரம் சாக்ஸோபோன் வாசித்ததுதான் சுவாரஸ்யம்.
இத்தாலியத் தேசிய கீதத்துடன் தனது சாக்ஸோபோன் வாசிப்பைத் தொடங்கிய நோயாளி, பின்னர் 1970 ஆம் ஆண்டு வெளியான ‘லவ் ஸ்டோரி’ திரைப்படத்தின் தீம் பாடலையும் வாசித்து அசத்தியுள்ளார்.
நோயாளி சாக்ஸோபோன் வாசித்ததனால் அறுவைச்சிகிச்சை மருத்துவக் குழுவுக்கும் இது பயனுள்ளதாக இருந்தது. அவருக்குச் செய்யப்பட்ட இந்த வெற்றிகரமான அறுவைச்சிகிச்சை மூலம், அவர் நலமாக வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து மருத்துவர்கள், “அறுவைச்சிகிச்சையின்போது நோயாளி இசைக்கருவியை வாசித்ததால் அவருடைய மூளையை மிகவும் எளிதாக எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது, மூளை வரைபடத்தைப் புரிந்துகொள்ள எளிதாக இருந்தது. நோயாளி அறுவைசிகிச்சையின் போது பயத்தைவிட அமைதியைத்தான் உணர்ந்தார்” என்றனர்.
இதேபோல், 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம், லண்டனைச் சேர்ந்த 53 வயது வயலின் கலைஞரான டாக்மர் டர்னருக்கு இடப்பக்க மூளையில் இருந்த கட்டியை அகற்றுவதற்காக செய்யப்பட்ட அறுவைசிகிச்சையின்போது டாக்மரும் வயலின் இசைத்துக்கொண்டே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெ.பிரகாஷ்
உடல்கள் வெட்டப்பட்டது எப்படி? -நரபலி வழக்கில் பொம்மை உடலை வைத்து விசாரணை!