பரிதாபங்கள் சேனலில் திருப்பதி லட்டு வீடியோ… வருத்தம் தெரிவித்த கோபி, சுதாகர்

Published On:

| By Selvam

திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்த நெய் சேர்க்கப்பட்ட விவகாரம், தேசிய அளவில் கடந்த ஒரு வாரமாக மிக முக்கியமான பேசுபொருளாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்தில் திருப்பதி ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் 11 நாட்கள் விரதம் கடைபிடித்து வருகிறார். மேலும், இந்த சர்ச்சை தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்தநிலையில், பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நேற்று (செப்டம்பர் 24) வெளியிட்ட வீடியோ ஒன்று சர்ச்சையாகியுள்ளது.

நமது வாழ்க்கையில் தினசரி நடக்கும் ஜாலியான விஷயங்கள், அரசியல் அரட்டைகள் போன்றவற்றை காமெடி கலந்து கோபி, சுதாகர் ஆகியோர் பரிதாபங்கள் யூடியூப் சேனலில் வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில், திருப்பதி லட்டு பரிதாபங்கள் என்ற பெயரில் நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தனர். அந்த வீடியோவில் திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தப்பட்டது, பவல் கல்யாண் விரதம் இருப்பது, சைவ உணவு உண்பவர்களை கேலி செய்வது போன்று நகைச்சுவையாக வீடியோ வெளியிட்டிருந்தனர்.

இந்த வீடியோ வெளியாகி சில மணி நேரங்களில் எக்ஸ், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிரம் உள்ளிட்ட  சோஷியல் மீடியாக்களில் டிரெண்டானது. ஒருபக்கம் இதனை நகைச்சுவையாக சிலர் பகிர்ந்திருந்தனர். அதேவேளையில், இந்துக்கள் மனது புண்படுத்தும் வகையில் உள்ள இந்த வீடியோவை உடனடியாக டெலிட் செய்ய வேண்டும். கோபி, சுதாகர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சிலர் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து பரிதாபங்கள் யூடியூப் சேனலில் இருந்து அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது.  வீடியோ நீக்கம் தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், “கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைக்காக உருவாக்கப்பட்டது.

யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருப்பதால், அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கி உள்ளோம். இது போல் வருங்காலங்களில் நடைபெறாது என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜம்மு – காஷ்மீர் இரண்டாம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு விறுவிறுப்பு!

“களரி பயிற்சிக்கு குமரியில் தனி ஆராய்ச்சி மையம்” – மனோ தங்கராஜ் தகவல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel