பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாநிலத்தில் நேற்று (மார்ச் 11) பகல் கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இதுவரை 155 பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசின் ரேடியோ இன்று (மார்ச் 12) செய்தி வெளியிட்டுள்ளது.
‘பலுசிஸ்தானின் போலான் மாவட்டம் அருகே ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை பலூச் விடுதலைப் படை என்ற கிளர்ச்சிக் குழு நேற்று கடத்தியது. சுமார் 400 பயணிகளோடு சென்று கொண்டிருந்த ரயில் இன்ஜினை ராக்கெட்டால் சுட்டு ரயிலைக் கடத்தியது. இந்தத் தாக்குதலில் ரயிலின் டிரைவர் கொல்லப்பட்டார். இதையடுத்து ரயிலை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். Pakistan Train Hijack Live Updates
குவெட்டாவிலிருந்து பெஷாவருக்கு நேற்று காலை 9 மணியளவில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. ஒன்பது பெட்டிகளில் 450 பயணிகள் இருந்தனர் . பிற்பகல் 1 மணியளவில், முஷ்காஃப் அருகே அமைந்துள்ள ரயில்வே சுரங்கப்பாதை எண் 8 அருகே, பனீர் மற்றும் பெஷி ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் தாக்கப்பட்டு பலூச் விடுதலைப் படைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மாலை முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் பலூச் விடுதலைப் படையோடு நேரடி துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் நேற்று இரவு வரை பணயக் கைதிகளாக இருந்த 80 பயணிகளை மீட்டது ராணுவம்.
இந்நிலையில் இன்று, “பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட சுமார் 155 பயணிகளை தாக்குதல் நடத்தியவர்களிடமிருந்து மீட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு நடத்தும் ‘ரேடியோ பாகிஸ்தான்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இதுவரை 27 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகவும், காயமடைந்த 37 பேர் மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பப்பட்டதாகவும் அரசு வானொலி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், “ஜாஃபர் எக்ஸ்பிரஸ் மீதான கோழைத்தனமான தாக்குதலுக்கு காரணமான பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் உள்ள தங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பில் உள்ளனர்.
பயங்கரவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளை அப்பாவி பணயக்கைதிகளுக்கு மிக அருகில் நிறுத்தியுள்ளனர். தற்கொலைப் படையினர் மூன்று வெவ்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பணயக்கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் இருப்பதால் மீட்பு நடவடிக்கை மிகுந்த எச்சரிக்கையுடன் நடத்தப்பட்டு வருகிறது” என்று பாகிஸ்தான் அரசு வானொலி தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த கடத்தலில் ஈடுபட்ட பலூச் விடுதலை படை அமைப்பு, ரயிலில் இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை தாங்களே விடுவித்ததாக கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகிறன.
இந்தக் கடத்தல் தொடர்பாக பாகிஸ்தான் மனித உரிமைகள் ஆணையம் இன்று தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியது, அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளது.
ரயில் கடத்தப்பட்ட குவெட்டா பகுதியின் ரயில்வே கோட்டக் கண்காணிப்பாளர் இம்ரான் ஹயாத், “ரயில் இன்ஜினின் ஓட்டுநர் மற்றும் எட்டு பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட பத்து பேர் உயிரிழந்தனர். Pakistan Train Hijack Live Updates

மீட்கப்பட்ட சுமார் 100க்கும் மேற்பட்ட பயணிகள் அருகிலுள்ள பனீர் ரயில் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர், இதில் 58 ஆண்கள், 31 பெண்கள் மற்றும் 15 குழந்தைகள் அடங்குவர். ஒரு நிவாரண ரயில் அவர்களை அருகிலுள்ள மாக் நிலையத்திற்கு அழைத்துச் சென்றது. மீதமுள்ள பயணிகளைப் பாதுகாப்பாக மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன.
ஜாஃபர் எக்ஸ்பிரஸில் பயணிக்க சுமார் 750 பயணிகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், கடத்தப்பட்டபோது அதில் சுமார் 450 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். 200க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்களும் ரயிலில் பயணித்தனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பயங்கரவாத செயலை அடுத்து பலுசிஸ்தான் மாநில அரசு அவசர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளதாக அரசின் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்ட் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் உள்துறை இணையமைச்சர் தலால் சவுத்ரி நேற்று இரவு ஜியோ நியூஸிடம் கூறுகையில், ”பலர் ரயிலில் இருந்து இறக்கிவிடப்பட்டு பயங்கரவாதிகளால் மனித கேடயங்களாகப் பயன்படுத்தப்படுகிறார்கள். உயிர்கள் சம்பந்தப்பட்டிருப்பதால் பாதுகாப்புப் படையினர் கவனமாக செயல்பட்டு வருகிறோம்” என்று கூறியிருந்தார். Pakistan Train Hijack Live Updates