நம்மில் பலருக்கும் உண்டாகும் தலைமுடி சார்ந்த பிரச்சினைகளில் முக்கியமானது, எண்ணெய்ப்பசைத் தன்மையுள்ள தலை (ஸ்கால்ப் – Scalp). வெப்பமான காலநிலை, நாம் பயன்படுத்தும் ஷாம்பூவில் இருக்கும் வேதிப்பொருள்களின் விளைவுகள் உள்ளிட்டவற்றால் தலையில் எண்ணெய்ப்பசை பிரச்சினை வரலாம். Oily scalp home remedies
வெளியில் செல்லும்போது தூசு போன்றவை காரணமாகத் தலையில் அழுக்கு சேரும்போது, எண்ணெய்ப்பசை அதை இன்னும் பிசுபிசுப்பாக்குவது, எப்போது பார்த்தாலும் தலையைச் சொறிய வேண்டும் என்பது போலவே இருப்பது, தலைமுடி சுத்தமாக இல்லாமல் இருப்பது என இவையெல்லாம் எண்ணெய்ப்பசை ஸ்கால்ப்பின் விளைவுகளே.
தலையில் பிசுபிசுப்புத்தன்மை அதிகமாகும்போது அதில் பூஞ்சைத் தொற்று பரவ ஆரம்பிக்கும். இந்தப் பூஞ்சைத் தொற்று பரவப் பரவ, அது தலைமுடியை பாதித்து அரிப்பை உண்டாகும். இந்தப் பிரச்னையைச் சரி செய்வதற்கு சில எளிய வழிமுறைகள் உள்ளன என்கிறார்கள் அழகுக்கலை நிபுணர்கள்.
முதலில், 30 கிராம் அளவுக்கு கற்றாழை ஜெல்லை ஒரு பவுலில் எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு அல்லது மூன்று சொட்டு தேங்காய் எண்ணெயைச் சேருங்கள். சூடான நீரில் ஒன்று அல்லது இரண்டு கிரீன் டீ பேக்குகளை சேர்த்து 10 நிமிடங்களுக்கு அப்படியே விடுங்கள். டார்க் பிரவுன் நிறத்தில் டிகாக்ஷன் இறங்கிவிடும். பிறகு, இதிலிருந்து இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் கிரீன் டீ டிகாக்ஷனை எடுத்து மேற்சொன்ன கற்றாழை ஜெல் கலவையில் சேருங்கள். இறுதியாக, இரண்டு, மூன்று சொட்டுக்கள் டீ ட்ரீ ஆயிலையும் இதனுடன் சேருங்கள். இவை அனைத்தையும் நன்றாகக் கலந்துகொள்ளுங்கள்.
குளிக்கச் செல்வதற்கு ஒரு அரைமணி நேரம் முன்பாக, தலையில் ஒவ்வொரு பகுதியாக வகிடு எடுத்து, இந்தக் கலவையை ஸ்கால்ப் பகுதிகளில் நன்கு தடவுங்கள். தலைமுடியில் இதனைத் தடவ வேண்டாம். அப்படிச் செய்தால் தலைமுடி மிகவும் டிரை ஆகிவிடும். பிறகு, ஐந்து முதல் எட்டு நிமிடங்கள் அப்படியே விட்டு, பின்னர் கொஞ்சமாக ஷாம்பூ போட்டு தலையை அலசுங்கள்.
சைனஸ் பிரச்சினை உள்ளவர்கள் ஐந்து நிமிடங்கள் வரை மட்டும் வைத்திருந்து அலசி விடலாம். இவ்வாறு செய்த பின்னர், தலையில் உள்ள எண்ணெய்ப்பசைத் தன்மை கன்ட்ரோல் ஆகியிருக்கும். அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்குத் தலையில் எண்ணெய் வடியாமல் இருக்கும். குழந்தைகளுக்கு இதனைப் பயன்படுத்த வேண்டாம். 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதனைப் பயன்படுத்தலாம்.
தலையில் எண்ணெய் வடியும் பிரச்சினை உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் இந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி தலையை அலசலாம். அதிகமாக வெயிலில் அலைபவர்கள் வாரத்திற்கு மூன்று நாட்கள்கூட இந்த ஹேர் பேக்கைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.