பட்டன் ஃபோன்கள் என்றாலே நம் நினைவுக்கு முதலில் வரும் அலைபேசி நிறுவனத்தின் பெயர் ‘நோக்கியா’ தான். என்னதான் ஆப்பிள் ஐபோன் துவங்கி ரெட்மி வரை, மிக உயரிய தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் தினமும் அறிமுகமானாலும், ‘நோக்கியா’ என்ற பெயர் இன்றளவும் நமது நினைவில் நிலைத்து நிற்கிறது.
இந்நிலையில், இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப, ‘நோக்கியா’ நிறுவனம் ஒரு புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளது. அண்மை காலங்களில், பண பரிவர்த்தனை என்றாலே ஆன்லைன் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு ரூ.5 மிட்டாய் வாங்கினால் கூட, அதற்கான பணத்தை ஆன்லைனில்தான் செலுத்துகிறோம். இப்படியான சூழலில், யுபிஐ (UPI) வசதி கொண்ட பட்டன் ஃபோனை நோக்கியா நிறுவனம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து நோக்கியா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘நோக்கியா 105 கிளாசிக்’ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த ஃபோன் யுபிஐ வசதியை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆனால், எம்மாதிரியான யுபிஐ வசதி என்பது குறித்து விரிவான தகவல்கள் அந்த அறிவிப்பில் இடம்பெறவில்லை.
‘நோக்கியா 105 கிளாசிக்’ விலை என்ன?
சிங்கிள் சிம், டூயல் சிம் என 2 வகைகளில் அறிமுகமாகியுள்ள இந்த ஃபோன், சார்ஜர் உடன், சார்ஜர் இல்லாமல், என மொத்தம் 4 வகைகளில் விற்பனைக்கு வரவுள்ளது. மேலும், நீலம் மற்றும் சார்கோல் என 2 வண்ணங்களில் இந்த ஃபோன் விற்பனைக்கு வரவுள்ளது. இந்தியாவில், இந்த ‘நோக்கியா 105 கிளாசிக்’ ஃபோன் ரூ.999 என்ற ஆரம்ப விலையில் விற்பனையாகவுள்ளது.
‘நோக்கியா 105 கிளாசிக்’ சிறப்பம்சங்கள் என்ன?
இந்த ஃபோன் 800mAh என்ற பேட்டரி வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. வயர்லெஸ் FM ரேடியோ வசதியையும் இந்த ‘நோக்கியா 105 கிளாசிக்’ ஃபோன் கொண்டுள்ளது.
மேலும், இந்த ஃபோன் கடுமையான ஆயுள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனைத்து சுற்றுசூழல் நிலைகளிலும் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருக்கும் எனவும் நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த ஃபோன் வாங்கிய நாளில் இருந்து, பயனர்களுக்கு ஒரு வருட ரிப்ளேஸ்ட்மென்ட் கேரன்டியும் வழங்கப்பட உள்ளதாக நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
முரளி
IND vs AUS: டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு… கேப்டன் யார் தெரியுமா?