’ஃபேர் அண்ட் ஹாண்ட்சம்’ க்ரீம் : பரிசோதனைக்கு மறுப்பு!

Published On:

| By christopher

அதிக இளைஞர்களை கொண்ட இந்திய சந்தையில் சருமத்தை மெருகூட்டும்(ஃபேர்னஸ்) கிரீம் தயாரிப்புகளுக்கு பஞ்சமே இல்லை.

பயன்படுத்திய குறிப்பிட்ட நாட்களில் உங்கள் சருமத்தை ஜோதிகா மாதிரி ஜொலி ஜொலிக்க வைக்கும் என்று கூறி எத்தனையோ ’க்ரீம்’ தயாரிப்புகள் இந்திய திரையுலகின் நட்சத்திர நடிகர்களை வைத்து கோடிகணக்கில் விளம்பரம் செய்கின்றன.

அந்த வகையில் ஒன்றுதான் இமாமியின் ஃபேர் & ஹேண்ட்சம் க்ரீம்.

இது போன்ற க்ரீம்களை பயன்படுத்திய பலருக்கும் ’அவங்க சொன்னா மாதிரி தான் இந்த க்ரீமை பயன்படுத்துறோம். பிறகு ஏன் நமது நிறம் ஜொலி ஜொலிக்கவில்லை’ என்ற கேள்வி எழுந்திருக்கும். சிறிதுநேரத்தில் அது அப்படிதான் என்று அடுத்த வேலையை பார்க்க சென்றிருப்பார்கள்.

ஃபேர்னஸ் க்ரீமுக்கு எதிராக வழக்கு

ஆனால் இப்படி எழுந்த கேள்வியை தனக்குள்ளே மட்டும் வைத்திருக்காமல் கடந்த 2013ம் ஆண்டு நுகர்வோர் நீதிமன்றத்தின் படி ஏறினார் டெல்லியைச் சேர்ந்த நிகில் ஜெயின்.

மத்திய டெல்லியின் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் அவர் அளித்த புகார் மனுவில், “ இமாமி தயாரித்த ‘ஃபேர் அண்ட் ஹேண்ட்சம் கிரீம் (விளம்பரத்தில் கூறியபடி ஆண்களுக்கான உலகின் நம்பர் 1 ஃபேர்னஸ் கிரீம்) தயாரிப்பின் லேபிளிங் மற்றும் பேக்கேஜிங்கில் குறிப்பிடப்பட்டுள்ள பயன்பாட்டிற்கான வழிமுறைகளின்படி தயாரிப்பைப் பயன்படுத்தினேன்.

ஆனால் விளம்பரத்தில் கூறியது போல் எந்த முடிவையும் நான் பெறவில்லை. இமாமி தனது தயாரிப்பு விளம்பரத்திற்காக பிரபல நடிகரான ஷாருக்கானை அதன் பிராண்ட் தூதராகப் பயன்படுத்துகிறது. அவர் மூலம் சருமம் மூன்று வாரங்களில் ஜொலிக்கும் என்று பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறது என்று வாதிட்டார்.

மேலும், “நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986 இன் பிரிவு 14 இன் படி நியாயமற்ற வர்த்தக நடைமுறையை நிறுத்துமாறு இமாமிக்கு உத்தரவிட வேண்டும்.

புகார்தாரரின் உணர்ச்சிகளுடன் இமாமி விளையாடியதால், தண்டனை இழப்பீடாக 19 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

புகார்தாரரின் வழக்கு கட்டணம் மற்றும் பிற போக்குவரத்து செலவுகளுக்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

எந்த ஆதாரமும் இல்லை : இமாமி

இதற்கு இமாமி நிறுவனம் தரப்பு அளித்த பதிலில், ”பேக்கேஜில் உள்ள அறிவுறுத்தல்களின்படி மூன்று வாரங்களுக்கு கிரீம் பயன்படுத்தியதாக கூறும் புகார்தாரர் அதை நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை வைக்கவில்லை.

ஃபேர் & ஹேண்ட்சம் நியாயமான மற்றும் தகுதிவாய்ந்த அதிகாரியின் உரிமத்தின் கீழ் தயாரிக்கப்படுகிறது, மேலும் இது அறிவியல் ஆராய்ச்சி, மதிப்பீடு மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.

இந்நிலையில் உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தையில் அதிக வாடிக்கையாளர்களுடன் மிகவும் பிரபலமான நுகர்வோர் பொருட்களின் புகழ்பெற்ற உற்பத்தியாளரான இமாமியின் நன்மதிப்பு மற்றும் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்துடன் புகார் செய்யப்பட்டுள்ளது.

புகார்தாரர் க்ரீமை தவறாமல் பயன்படுத்தியதற்கும் அவரது சருமத்தின் தன்மை மேம்படவில்லை என்பதற்கும் மன்றத்தில் எந்த ஆதாரமும் வைக்கவில்லை.

தோல் மருத்துவரிடம் இருந்து தகுந்த மருத்துவக் கருத்தைப் பெறாமல், ஒரு பாமரர் இத்தகைய கூற்றைக் கூறுவது உண்மையில் அபத்தமானது. புகார் அற்பமானது மற்றும் முரண்பாடுகள் நிறைந்தது.

இந்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை என்பதால் புகார்தாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று இமாமி நிறுவனம் வாதிட்டது.

நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

எனினும் 2015ம் ஆண்டு இவ்வழக்கில் அளிக்கப்பட்ட நுகர்வோர் மன்ற தலைவர் இந்தர் ஜீத் சிங் மற்றும் உறுப்பினர்கள் ஷாஹினா மற்றும் வியாஸ் முனி ராய் அமர்வு, மனுதாரர் நிகில் ஜெயினுக்கு ஆதரவான நிலைபாட்டையே எடுத்தது.

”இமாமி நிறுவனம் பிரபல நடிகரை வைத்து வெளியிட்டுள்ள விளம்பரத்தில் தயாரிப்பின் பயன்பாட்டால் சருமத்தின் ஆரோக்கியம் மற்றும் தரம் மேம்படும்” என்று கூறியுள்ளது. இது, அதன் தயாரிப்புகளை விற்க ஒரு நியாயமற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றுவதாகவே கருதபடுகிறது.

அதே வேளையில் தயாரிப்பைப் பயன்படுத்துவதன் மூலம் சருமம் அழகாகும் என்ற வாக்குறுதியை நியாயப்படுத்த இமாமி நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று கூறியது.

இதனையடுத்து நுகர்வோர் மன்றம் இமாமி நிறுவனத்திற்கு எதிராக 3 தீர்ப்புகளை வழங்கியது.

“புகார்தாரருக்கு ரூ. 10,000/- இழப்பீடாக வழங்கப்படும், இதில் வழக்குச் செலவும் அடங்கும்.

டெல்லி மாநில ஆணையத்தில் பராமரிக்கப்படும் நுகர்வோர் நல நிதியில் ரூ.15 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும்.

க்ரீமை பயன்படுத்தினால் நிறத்தை கருமையிலிருந்து சிவப்பாக மாற்றும் என்பதைக் குறிக்கும் விளம்பரங்களை இமாமி நிறுவனம் திரும்ப பெற வேண்டும்” என்று உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பினை சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் வெகுவாக பாராட்டினர்.

மீண்டும் தூசிதட்டப்பட்ட வழக்கு

இந்நிலையில் இந்த உத்தரவை எதிர்த்து மாநில நுகர்வோர் தகராறுகள் நிவர்த்தி ஆணையத்திடம் இமாமி நிறுவனம் மறுபரீசிலனை மனுவை அளித்தது.

அதில். “புகார்தாரர் தன்னிச்சையான பிரமாணப் பத்திரத்தைத் தவிர வேறு எந்த நிபுணத்துவ ஆதாரத்தையும் சமர்ப்பிக்கத் தவறிவிட்டார். கூடுதலாக, ஆய்வக சோதனை முடிவை கூட மன்றத்தின் முன் வைக்கப்படவில்லை.” என்று அதில் கூறப்பட்டது.

இதனையடுத்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது புகார்தாரர் நிகில் ஜெயில் நேரடி ஆய்வக சோதனையை நாடினார்.

விண்ணப்பம் நிராகரிப்பு

ஆனால் மத்திய டெல்லியில் உள்ள மாவட்ட நுகர்வோர் மன்றம், இமாமியின் ஃபேர்னஸ் க்ரீமை ஆய்வகத்தில் சோதனை செய்யக் கோரும் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளது.

மேலும், 2013 ஆம் ஆண்டு க்ரீம் மாதிரி கிடைக்காது என்பதால் நேரடி ஆய்வக சோதனைக்கான உத்தரவை டெல்லி நுகர்வோர் மன்றம் வழங்கவில்லை.

இது புகார்தாரருக்கு எதிராக இமாமி நிறுவனம் திட்டமிட்டு காய் நகர்த்தி உள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கு வரும் ஜனவரி 28ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் பராஸ் ஜெயின் ஆஜராக உள்ளார். இமாமி லிமிடெட் சார்பில் வழக்கறிஞர்கள் தனக்ஷி காந்தி மற்றும் ஆரவ் பண்டிட் ஆகியோர் ஆஜராக உள்ளனர்.

சர்வதேச கார்ப்பரேட் நிறுவனத்திற்கு எதிரான வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில் மீண்டும் தூசி தட்டி விசாரணைக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

5 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது அறிவிப்பு!

துணிவு ரிலீஸ் எப்போது?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share