நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை மயிலாப்பூர் காய்கறி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரிகளிடம் காய்கறி வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ளார்.
நேற்று (அக்டோபர் 8) அம்பத்தூர் அருகே கள்ளிகுப்பத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மனநலம் குன்றிய சிறார்களுக்கான இல்லத்தை, நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.

பின்னர் நேற்று மாலை மயிலாப்பூர் மார்க்கெட்டுக்கு திடீர் விசிட் அடித்த நிர்மலா சீதாராமன், அங்குள்ள சில்லறை வியாபாரிகளிடம் காய்கறிகள் வாங்கினார்.
இந்த வீடியோவை நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்த காணொலியில், நிர்மலா சீதாராமன் காய்கறி வியாபாரியிடம் விலையை கேட்கிறார். பின்னர் பிடிகருணை கிழங்கு, சுண்டைக்காய் ஆகியவற்றை வாங்கினார்.
தொடர்ந்து வியாபாரியிடம் தண்டுக்கீரை இருக்கிறதா என கேட்டார். இல்லை என்றதும் மற்ற கீரைகளை வாங்கினார்.
நிர்மலா சீதாராமன் மார்க்கெட்டில் காய்கறி வாங்கியபோது, அங்கு காய்கறி வாங்க வந்தவர்கள் நலம் விசாரித்தனர். மிகவும் யதார்த்தமாக இருக்கிறீர்கள் என்று கூறி மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
நிர்மலா சீதாராமனும் அவர்களுடன் சிறிது நேரம் உரையாடினார். பின்னர் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். ’இதுபோன்ற காய்கறிகள் டெல்லியில் கிடைப்பதில்லை’ என்று மத்திய அமைச்சர் கூறியதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.
அவருடன் தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருந்தார்.
நிர்மலா சீதாராமன் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். 2006-ஆம் ஆண்டு பாஜகவில் சேர்ந்த அவர், 2014 -ஆம் ஆண்டு பாஜக செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு பிரதமர் மோடி அமைச்சரவையில் ராணுவ அமைச்சராக இருந்த நிர்மலா சீதாராமன், 2019-ஆம் ஆண்டு முதல் நிதியமைச்சராக இருந்து வருகிறார்.
செல்வம்
வேலைவாய்ப்பு : பாரதிதாசன் பல்கலையில் பணி!
திமுக தலைமைக் கழக தேர்தலை நடத்தும் ஆற்காடு வீராசாமி: யார் இந்த சூப்பர் சீனியர்?
Comments are closed.