நீ போ… நீ வா… ஆமீர்கானை விட்டுவிட்டு, ஹிருத்திக்கை தாக்கும் நெட்டிசன்கள்!

டிரெண்டிங்

ஆமீர்கானுக்கு ஆதரவாக ட்விட் போட்ட ஒரே காரணத்திற்காக, ஹிருத்திக் ரோஷனின் அடுத்த படமான விக்ரம் வேதாவை புறக்கணிக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

பாலிவுட்டுக்கு இது போதாத காலம். அதிலும் குறிப்பாக ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் ஆமீர்கான் என்று பாலிவுட்டின் முகமாக வலம் வந்த ’கான்’ நடிகர்கள் படும் பாடு பெரும் பாடாக உள்ளது.

கடந்த 11ம் தேதி ஆமீர்கானின் லால் சிங் சத்தா திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு இடையே வெளியானது. ஆனால் இந்தியாவில் மட்டும் #BoycottLaalsinghChaddha என்ற கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியானது.

13 வருடத்தில் இதுவே முதன்முறை!

லால் சிங் சத்தா திரைப்படம் கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த பாரஸ்ட் கம்ப் திரைப்படத்தின் அதிகார பூர்வ ரீமேக் தான். எனினும் இந்திய மண்ணுகேற்ப கதையில் மாற்றங்களை கொண்டு வந்து, தனது அசாத்தியமான நடிப்பால் சிறந்த படமாக மாற்றியிருந்தார் அமீர்கான்.

மேலும் தனக்கு எதிராக கட்டமைக்கப்பட்டுள்ள தவறான பிம்பத்தினால் தான் மிகவும் புண்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

netizens agains hrithik roshan

ஆனால் பாலிவுட் படங்களுக்கு நிலவும் எதிர்ப்பு காரணமாக படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. லால் சிங் சத்தா திரைப்படத்தின் முதல் நாள் வசூல் ரூ 12 கோடி என்று கூறப்படுகிறது. கடந்த 13 ஆண்டுகளில் ஆமீர்கான் படத்திற்கு கிடைத்த முதல்நாள் குறைந்த வசூல் என்று கூறப்படுகிறது.

லால் சிங் சத்தாவுக்கு ஹிருத்திக் ஆதரவு!

இதற்கிடையே படம் பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் படம் குறித்து பாசிட்டிவான கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வரிசையில், சமீபத்தில் லால் சிங் சத்தா படத்தை நேற்று (ஆகஸ்ட் 13) பார்த்த பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், அதுகுறித்து பாராட்டி ட்வீட் செய்தார்.

அவரது பதிவில், “இப்போதுதான் லால் சிங் சத்தாவைப் பார்த்தேன். இந்தப் படத்தின் ஆன்மாவை நான் உணர்ந்தேன். இதில் நிறை, குறைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க படம் பிரமாதமாக உள்ளது. மாணிக்கம் போன்ற இந்த படத்தை தவறவிடாதீர்கள் நண்பர்களே! படம் மிக அருமையாக உள்ளது.

இப்போது போய் பாருங்கள்” என்று ஹார்ட்டின் சிம்பலையும் பதிவிட்டு இருந்தார்.

ஒரு ட்வீட்டால் கிளம்பிய எதிர்ப்பு!

அவ்ளோ தான், இப்போது லால் சிங் சத்தா படத்தை எதிர்த்து வந்த மொத்த கும்பலும், ஆமீர்கானிடம் இருந்து ஹிருத்திக் ரோஷனுக்கு எதிராக கிளம்பி உள்ளது.

இப்போது தமிழில் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் படமான விக்ரம் வேதா ரீமேக்கில் ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்.

இதனை தமிழில் இயக்கிய புஷ்கர்-காயத்ரி தம்பதியினர் தான் இயக்கி வருகின்றனர். படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆமீர்கானின் லால்சிங் சத்தா படத்திற்கு ஆதரவு தெரிவித்ததை அடுத்து, இவரது விக்ரம் வேதா படத்தையும் புறக்கணிக்குமாறு #Boycottvikramvedha என்ற ஹேஷ்டேக்கை நெட்டிசன்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ஒரு பயனர், ’நீ பழனிக்கே பால்காவடி எடுத்தாலும்’ என்ற டோனில், “ நீங்கள் நிலவில் போய் படம் எடுத்தாலும் ரிசல்ட் பிளாப்பாக தான் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றொருவர், “நீங்கள் இதைச் செய்திருக்கக்கூடாது. உங்கள் படத்தில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, மற்றவர்களை ஆதரிக்க முயற்சிக்கிறீர்கள். விளைவுகளைச் சந்திக்க தயாராகுங்கள். விக்ரம் வேதாதான் எங்களது அடுத்த இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு பயனர், விக்ரம் வேதாவின் ஒரிஜினல் வெர்சன் ஹெச்.டி பிரிண்டாக, ஆங்கில சப் டைட்டிலுடன் யூடியுபில் கிடைக்கும் போது, இதை எதற்கு ரீமேக் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

ஹிருத்திக் ரோஷனுக்கு எதிரான எல்லா ட்விட்களிலும் #Boycottvikramvedha என்ற ஹேஷ்டேக்யும் பதிவிட்டு விக்ரம் வேதா படத்தை புறக்கணியுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

இதனையடுத்து தற்போது பாலிவுட் படங்களுக்கு எதிராக எழுந்துள்ள இந்த எதிர்ப்பை எப்படி சமாளிப்பது என்று யோசித்து வருகிறது பாலிவுட் திரையுலகம்!

கிறிஸ்டோபர் ஜெமா

ரஜினியுடன் 23 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் ரம்யா கிருஷ்ணன்

+1
0
+1
0
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *