கணவனை விட அதிகம் சம்பாதிக்கும் மனைவிமார்கள் என்ற தலைப்பில் நேற்று (செப்டம்பர் 11) நீயா நானா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற மனைவி ஒருவர், தனது கணவன் தங்களுடைய குழந்தையின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்டை நீண்ட நேரம் பார்ப்பதாகவும், ஒரு மணி நேரம் ஏ,பி,சி,டி படிப்பதாகவும் தெரிவித்தார்.
அவரது கணவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் “ஏன் நீங்கள் நீண்ட நேரம் உங்கள் குழந்தையின் ப்ராக்ரஸ் ரிப்பார்ட்டை பார்க்கிறீர்கள்? ” என்று கேட்டதற்கு, “என்னால் மார்க் எடுக்க முடியாததை என்னுடைய குழந்தை எடுக்கிறார்.
என்னுடைய மகள் அதிக மதிப்பெண் எடுக்கும் போது அதனை பார்க்கையில் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும். என்னால் தான் படிக்கமுடியவில்லை எனது குழந்தையின் ஆசைப்படி அவரை மருத்துவர் ஆக்குவேன்” என்று தெரிவித்தார்.
உடனே நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் அவருக்கு சிறப்பு பரிசளித்தார். இந்த வீடியோக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில், நடிகை பிரியா பவானி சங்கர், ”ஒருத்தர இகழ்ந்து அதை நகைச்சுவைன்னு நினைச்சு சிரிக்கறது ஒரு விதமான மனநோய். உங்க பார்வையும் பேச்சும் திருப்தியா இருந்துச்சு கோபி அண்ணா.
வெற்றிக்கு இங்க ஆயிரம் இலக்கணம் வச்சிருக்காங்க. ஆனா ஒரு அப்பா என்னைக்குமே தோற்கமுடியாது! அவரது வெற்றிய அங்கீகரிச்சதுக்கு வாழ்த்துகள்!” என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் கவின், தனது ட்விட்டர் பக்கத்தில், “படிப்புக்கும் பகுத்தறிவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற தந்தை தனது குழந்தை மீது வைத்துள்ள பாசத்தை சமூக வலைதளங்களில் அனைவரும் விவாதித்து வருகின்றனர்.
செல்வம்