குளிக்கும்போது முடி உதிர்வது என்பது பலருக்கும் இருக்கும் பிரச்சினை. முடி உதிர்வு பிரச்சனையை சந்திக்காதவர்கள்கூட தலைமுடியை நன்றாகத் தேய்த்து குளிக்கும்போது முடி உதிருவதை பார்த்திருப்பார்கள். இதைத் தவிர்ப்பது சுலபம்… எப்படி?
பலர் தலைமுடியை கட்டிக்கொண்டு குளிக்கச் செல்வார்கள். தண்ணீரில் முடியை நனைத்த பிறகு அவிழ்த்து விடுவார்கள். இதனால் கூந்தல் உதிரும் அபாயம் அதிகம் உண்டு.
எனவே குளிப்பதற்கு முன் தலைமுடியை சீப்பு வைத்து சீவி சிக்குகளை அகற்றிவிட்டு தேய்த்து குளிக்கும்போது முடி உதிர்வை தவிர்க்க முடியும்.
சிலர் அதிக விசையுள்ள ஷவர் அல்லது ஓடும் தண்ணீரான ஆறு குளங்களில் தலைக்குக் குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இதுபோன்ற நேரங்களில் முடியின் வேர்கள் வலுவிழக்க நேரிடும்.
குறிப்பாக முடியின் மயிர்க்கால்கள் பலவீனமாக இருப்பவர்களுக்கு முடி உதிர்வு பிரச்சினை இருமடங்காக அதிகரிக்க வாய்ப்புள்ளது.
தலைமுடியை சுத்தம் செய்யும்போது ரசாயனங்கள் அடங்கிய ஷாம்புகளை அதிக அளவில் பயன்படுத்தும்போது முடி வறட்சி அடைந்து முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும். மேலும் ஷாம்புவுடன் கண்டிஷனரை பயன்படுத்தாமல் இருந்தாலும் முடி உதிர்வு பிரச்சினை ஏற்படும்.
பலர் தலைக்கு குளிப்பதையே மிகவும் அலட்சியமாக நினைப்பார்கள். தலைக்கு குளித்த பிறகு ஈரத்தை உறிஞ்சுவதற்கு டவலால் வேகமாக உதறுவது, தட்டுவது போன்றவற்றை செய்வார்கள். இப்படி கூந்தலை மிகவும் கடினமாக கையாளும்போது முடி பலவீனம் அடைந்து உதிரும்.
நம் உடலில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பதற்கான முதல்கட்ட அறிகுறியே முடி உதிர்தல். அதை நாம் எப்போதும் அலட்சியம் செய்யக்கூடாது.
பல நாட்களாக இருக்கும் மன அழுத்தம், மரபியல், நமது உடல் ஹார்மோனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது சில மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்கவிளைவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் முடி உதிர்தல் ஏற்படலாம்.
இதைத் தவிர்க்க… புரதங்கள், வைட்டமின் பி மற்றும் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்த சில உணவுகள் ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் முக்கியம்.
இரும்புச் சத்துள்ள பேரிச்சை போன்ற பழங்கள், மீன், கீரைகள் முடி நன்கு வளர உதவுவதுடன் முடி உதிர்வதையும் தடுக்கும்.
அதைப்போலவே பால், முட்டை, பயிறு உள்ளிட்ட புரதம் மிகுந்த உணவும் மிகமிக அவசியம். வைட்டமின் நிறைந்த உணவுகள் முடிக்கு நன்மை தரும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ராகி சீவல்
இறந்தவரின் உடல் உறுப்புகளை திருடிய தனியார் மருத்துவமனை!
வேளச்சேரி மயான பூமி நவம்பர் 12 வரை செயல்படாது: வேறு இடங்கள் எவை?
வால்பாறை : சிறுத்தை தாக்கி சிறுமி பலி!