ஹெல்த் டிப்ஸ்: அடுக்குத் தும்மல், அடக்குவது எப்படி?

Published On:

| By Kavi

சிலருக்கு திடீரென்று அடுக்கடுக்காக தும்மல் வரும். இதை அடக்குவதற்கான வழியைச் சொல்கிறார்கள் சித்த மருத்துவர்கள்.

“அடுக்குத் தும்மல் வரும்போது நீங்கள் இருக்கும் இடம் எப்படிப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். குளிர்ச்சியான பகுதியா, சாலையிலிருந்தும் வெளிப்புறத்திலிருந்தும் வீட்டுக்குள் தூசு அதிகம் சேர்கிறதா என்றெல்லாம் பாருங்கள். சிலர் வீட்டைச் சரியாகச் சுத்தம் செய்யாமல் இருப்பார்கள். கண்ணுக்குத் தெரியாத தூசு காரணமாகவும் இப்படிப்பட்ட பிரச்னை வரலாம்.

வீட்டுக்குள்ளும் அலுவலகத்திலும் எப்போதும் ஏசி செய்யப்பட்ட சூழலில் இருப்பவர்களுக்கும் இந்தப் பிரச்னை வரலாம். இவர்கள் ஃபேன் மற்றும் ஏசி காற்று நேரடியாக முகத்தில்படும்படி இருப்பதையும் தூங்குவதையும் தவிர்க்க வேண்டும். ஜன்னலில் இருந்து குளிர்காற்று உள்ளே வராமல் பார்த்துக்கொள்வதும் அவசியம்.

இப்படி அடுக்குத் தும்மல் அவ்வப்போது தொடர்ந்தால், இரவில் பாலில் மிளகுத்தூளும், மஞ்சள்தூளும் சேர்த்துக் கொதிக்கவைத்துக் குடிக்கலாம்.

மிளகைப் பொடித்துவைத்துக் கொள்ளவும். அதை, தினமும் சாப்பிட்ட பிறகு மூன்று, நான்கு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்துச் சாப்பிட்டு வரலாம்.

ஆவி பிடிப்பது இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வாக அமையும். மூச்சுப்பயிற்சி செய்வதும் நல்ல நிவாரணம் தரும்.

இவற்றையெல்லாம் மீறி, நெற்றிப்பகுதி, கன்னப்பகுதி போன்றவற்றில் வலி இருந்தால், அது சைனஸ் பிரச்சினையாகத்தான் இருக்கும் என்பதால் நிச்சயம் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

வலியோடு அடுக்குத் தும்மலும் இருந்தால் நிச்சயம் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சைவ, அசைவ சூப், தூதுவளை, கற்பூரவள்ளி போன்றவற்றைத் துவையலாகச் செய்து சாப்பிடலாம். இவற்றை இடித்துச் சாறெடுத்து தேன் கலந்து எடுத்துக்கொள்ளலாம். கொள்ளு ரசம், உளுந்து கஞ்சி போல இயல்பிலேயே சூடு அதிகமான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பிரச்சினைக்கான காரணம் கண்டறிந்து அதைத் தீர்ப்பதுதான் சரியானது. புறச்சூழல் காரணம் என்றால் அதைச் சரி செய்ய வேண்டும்” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தியேட்டருல ஜாலி… ஆபிஸே காலி : அப்டேட் குமாரு

வரி கட்டும் அளவை விரிவுபடுத்துவதில் மாநில அரசின் பங்களிப்பு அவசியம் : நிர்மலா சீதாராமன்

விஜய்யின் அரசியல் பயணம்… எங்களுக்கு அந்த எண்ணம் இல்லை : அமைச்சர் வேலு பேட்டி!

டிஜிட்டல் திண்ணை: ஊரக உள்ளாட்சித் தேர்தல்… ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு!