நாசாவின் செயற்கைக்கோள் ஒன்று எடுத்த புகைப்படத்தில் சூரியன் புன்னகைப்பதுபோல் காட்சியளிப்பது இணையவாசிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளி வானிலையில் சூரிய வெப்பத்தின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறது.
அதன்படி, இந்த அமைப்பின் செயற்கைக்கோள், சூரியனின் உட்புறம், வளிமண்டலம், காந்தப்புலம் மற்றும் சூரியனிலிருந்து வெளியிடப்படும் ஆற்றல் ஆகியற்றையும் அளவீடு செய்கிறது.
சமீபத்தில் (அக்டோபர் 27) இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில்தான் சூரியனின் உருவம் புன்னகைப்பது போல் காட்சியளிக்கிறது. இந்தப் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சூரியன் சிரிப்பது போன்று இருக்கும் இந்தப் புகைப்படம், சூரிய மேற்பரப்பில் உள்ள கரோனல் துளைகள் ஆகும்.
இரண்டு துளைகள் கண்கள் போலவும் காட்சியளிப்பதுடன் சிமிட்டுவது போன்று காட்சியளிக்கிறது.
மூன்றாவது துளை அதன் கீழே மையத்தில் ஒரு பரந்த புன்னகை போன்ற குழியை உருவாக்கி உள்ளது.
இதுதொடர்பாக நாசா, தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ’புறஊதா ஒளியில், சூரியன் மீது காட்சியளிக்கும் இந்த இருண்ட பகுதிகள், கரோனல் துளைகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்தப் பகுதிகளிலிருந்து சூரியக் காற்று விண்வெளியில் வெளியிடப்படும்’ எனத் தெரிவித்திருக்கிறது.
அதேநேரத்தில், இந்த கரோனல் துளைகள் மூலம் சூரியப் புயல் பூமியைத் தாக்கலாம் என ஸ்பேஸ்வெதர் எனும் இணையதளம் எச்சரித்திருக்கிறது.
எனினும், இந்தப் படத்தைப் பார்த்த இணையவாசிகள் பலர், ’ஹாலோவீன் பூசணிக்காய்’ போன்று உற்சாகமாகப் பதிவிட்டுவருகின்றனர்.
ஹாலோவீன் என்பது பேய்களின் திருவிழாவாகும் (பேய் போல் வேஷம் போட்டு, மற்றவர்களை பயமுறுத்தி விளையாடும் நிகழ்வு).
இது, ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி உலகம் முழுவதும் (முதலில் ஐரோப்பாவில்) பல நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவில் பூசணிக்காயைப் பல்வேறு உருவங்களில் செதுக்கி, அதன் உள்ளே மெழுகுவர்த்தியையோ அல்லது அகல்விளக்கையோ பொருத்தி உருவகப்படுத்தும் ஜேக்-ஓ-லாந்தர் எனப்படும் பூசணிக்காய் விளக்கு இடம்பெறும்.
ஆண்டுதோறும் ஹாலோவீன் திருவிழாவை ஒட்டி, சமூக வலைதளங்களில் பலவிதமான பூசணிக்காய் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மக்கள் பகிர்வர்.
அதன்படி, கடந்த 2020ஆம் ஆண்டு நாசாவும் இதுபோன்ற சூரியனின் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தது.
அது, 2014ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் என்றாலும், அந்த புகைப்படத்தில் வட்டவடிவில் தீப்பிழம்பாக காட்சியளிக்கும் கதிரவனை பார்ப்பதற்கு, ஜேக்-ஓ-லாந்தர் பூசணிக்காய் போலவே இருந்தது. இதையடுத்தே, அந்தப் படம் ஹாலோவீன் திருவிழாவோடு சார்ந்துபோனது.
தற்போது, இந்த ஆண்டும் நாசா ஹாலோவீன் திருவிழாவை முன்னிட்டு, சிரிக்கும் சூரியன் படத்தைப் பகிர்ந்துள்ளது.
இதுபோலவே ஜேக்-ஓ-லாந்தர் எனப்படும் பூசணிக்காய் விளக்கு செய்யப்பட்டு, அது, நாசாவின் படத்தோடு இணைக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஜெ.பிரகாஷ்