“தசைப்பிடிப்பு… வயது பாகுபாடின்றி எல்லோருக்கும் வரும் பொதுவான பிரச்சினை என்பதால், இதைக் கண்டு பயப்படத் தேவையில்லை. ஆனாலும், எப்போதும் இது எளிதான பிரச்சினையாக இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, காலின் ஆடுசதைப் பகுதியில் வலி மற்றும் வீக்கம், நடந்தால் வலி, வீக்கம் அதிகமாவது மற்றும் ஆடுசதைப் பகுதியைத் தொட்டாலே வலிப்பது, கால் மரத்துப் போவது, காலின் வீக்கமுள்ள பகுதி மிகவும் இறுக்கமாக இருப்பது, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனே மருத்துவரைச் சந்திப்பது நல்லது.
ஏனென்றால், மேற்சொன்ன அறிகுறிகள் அந்தப் பகுதியில் ஏற்படும் ரத்தம் உறைதலின் (Blood Clot) அறிகுறியாகவும் இருக்கலாம்” என்கிறார்கள் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள்.
“நீண்டதூரப் பயணத்தின்போது உட்கார்ந்துகொண்டே பயணம் செய்தால், கால்வலி மற்றும் மூட்டுகளில் வலி வருவது சகஜம்.
அது பயப்படக்கூடிய தீவிரமான பிரச்சினை இல்லை என்றாலும், ஆடுசதையில் வலி, வீக்கம் வந்தால் அந்த இடத்தில் ரத்தம் உறைந்திருக்கிறது என்று அர்த்தம்.
இதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் உடலில் ரத்தச் சுழற்சி நடக்கும்போது உறைந்த ரத்தம் இதயத்துக்கோ, இதயத்திலிருந்து மூளைக்கோ செல்லும்போது மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் கூட இருக்கிறது.
வளரும் குழந்தைகள் உடற்பயிற்சி செய்யும்போதோ அல்லது விளையாடும்போதோ ஆடுசதையில் வலி ஏற்படும். ஆனால், வீக்கம் ஏற்படாது. இது இயல்பான ஒன்று.
ஆனால், சற்று வயதானோருக்கு ஆடுசதையில் வலி, வீக்கம் ஏற்படும்போதுதான் அதைக் கூடுதலாக கவனிக்க வேண்டும். ஆண்களைவிட, பெண்களுக்கு ஆடுசதைப் பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
மிகவும் பருமனான உடல்வாகு உள்ள பெண்கள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆடுசதையில் ரத்தம் உறைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதைத் தவிர்க்க… கணினி முன்பு நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள், பேருந்து, விமானத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி நீண்டதூரப் பயணம் மேற்கொள்பவர்கள் அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.
30 நிமிடங்களுக்கு மேல் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்வதைத் தவிர்க்க வேண்டும். அவ்வப்போது எழுந்து நடக்க வேண்டும்.
கார் ஓட்டுபவர்கள் பிரேக்கை அழுத்தி, அழுத்தி விடுவதைப்போல உட்கார்ந்திருக்கும்போது பாதங்களை அவ்வப்போது மடக்கி நீட்ட வேண்டும்.
உடலில் கொழுப்பு அதிகம் சேரும்போது ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளைத் தவிர்ப்பது நல்லது” என்று அறிவுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – சாப்பிட்டதும் ஜூஸ் குடிப்பவரா நீங்கள்?
இதெல்லாம் ஒரு பிரச்சனையா? – அப்டேட் குமாரு
டெட்பூல் & வோல்வரின்: விமர்சனம்!
எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? வானிலை மையம் குளு குளு அப்டேட்!