மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண் மோனாலிசா போஸ்லே. இவரின் தந்தை பாசி மாலைகளை விற்பவர். தற்போது, உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் தந்தையுடன் சென்று மோனலிசாவும் பாசி மாலைகள் விற்று வந்தார்.
பார்ப்பதற்கு மயக்கும் கண்களுடன் அழகான சிரிப்புடன் இருக்கும் இவர் அங்கு வரும் பக்தர்களை எளிதாக கவர்ந்தார். மோனலிசாவின் தன்னம்பிக்கையான பேச்சு, எளிமையான தோற்றம் காண்போரை கவரவே ஏராளமான ஆண்கள் அவரை மொய்க்க தொடங்கினர்.
ஆனால், மோனலிசா விற்கும் மாலையை வாங்குவோரின் எண்ணிக்கையைவிட, அவருடன் செல்பி மற்றும் வீடியோ எடுத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. இணையத்திலும் அவரின் புகைப்படங்கள் பரவ தொடங்கியது. லியார்னடோ டாவின்ஸி வரைந்த மோனலிசா ஓவியம் போலவே அவர் இருப்பதாக கூறி நெட்டிசன்களும் அவரை கொண்டாடினர்.
மக்கள் தனது மகளிடம் மாலைகளை வாங்குவதைவிட செல்பியே அதிகளவில் எடுத்ததை கண்ட மோனலிசாவின் தந்தை கடுப்பானார். கும்பமேளாவில் தேவையில்லாத கவனத்தை தன் மகள் ஈர்ப்பதாகவும் அவர் கருதினார். இதனால், மோனலிசாவை சொந்த ஊரான இந்தூருக்கே திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில், ‘கும்பமேளா போன்ற நிகழ்வில் ஒரு குடும்பத்தினர் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடிக் கொண்டிருக்கையில், அப்பாவி பெண்ணை சுற்றி சுற்றி பாவங்களை கழுவ சென்றவர்கள் பாவிகள் ஆனார்கள்’ என்ற விமர்சனங்களும் பரவி வருகின்றன.