இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 72வது பிறந்த நாளை பா.ஜ.க தொண்டர்கள் கொண்டாடி வருகிறார்கள். அதே வேளையில் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையில்லாத் திண்டாட்ட நாளாக காங்கிரஸ் கட்சியினர் அனுசரித்து வருகின்றனர்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை என்ற இந்திய தேசிய நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார் ராகுல்காந்தி.
நேற்று கேரளாவின் கொல்லத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தனது 9வது நாள் பயணத்தை மேற்கொண்டார்.
வேலைவாய்ப்பின்மை உச்சத்தில் இந்தியா!
அப்போது அவர் பேசுகையில், “இந்தியா உலகளவில் அதிக இளைஞர்களை கொண்ட நாடு. அவர்களை சரியான முறையில் பயன்படுத்தினால் உலக அளவில் இந்தியா உச்சத்தை அடையும்.
ஆனால் கடந்த 45 ஆண்டுகால வரலாற்றில் தற்போது மோடியின் ஆட்சிகாலத்தில் இந்தியா வேலையில்லாத் திண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கிறது.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுவதற்கு பதிலாக, பாஜகவினரால் வெறுப்பு அரசியல் விதைக்கப்படுகிறது. இதனால் அவர்கள் வழி தடுமாறுகின்றனர்.
இளைஞர்களின் அத்தியாவசிய தேவைகளை புரிந்துகொள்வதும் பாரத் ஜோடோ யாத்திரையின் முதன்மை நோக்கங்களில் ஒன்றாக உள்ளது.
மேலும் இளைஞர்களை வேலையில்லாமல் திண்டாடவைத்து பணக்காரர்களின் பாதுகாவலராக செயல்படும் மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்” என்று பேசினார்.
தேசிய வேலைவாய்ப்பின்மை தினம்
இதனையடுத்து இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17 ஆம் தேதியை “தேசிய வேலையின்மை தினமாக” அனுசரிக்க நேற்று அழைப்பு விடுத்தனர்.
அதன்படி, மோடியின் பிறந்தநாளான இன்று அவருக்கு எதிராக வேலைவாய்பின்மையை குறிக்கும் வகையில் NationalUnemploymentDay என்று ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் காங்கிரஸ் கட்சியினர் ட்விட் செய்து வருகின்றனர்.
தேசிய அளவில் ட்ரெண்டிங்!
ட்விட்டரில் பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கூறும் விதமாக #HappyBdayModiji என்ற ஹேஷ்டேக் 2 லட்சம் பதிவுகளை பெற்றுள்ளது.
ஆனால் அதே வேளையில் வேலைவாய்ப்பின்மை குறிக்கும் விதமாக NationalUnemploymentDay என்ற ஹேஷ்டேக் 5 லட்சத்திற்கும் மேலான பதிவுகளை பெற்று இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக மோடியின் பிறந்தநாளில் வேலைவாய்ப்பின்மை குறித்த கருத்துகள் இளைஞர்களால் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஆவின் இனிப்பு விலை உயர்வை திரும்ப பெறுக: பன்னீர்