உதட்டுக்கு மேலோ, கன்னத்திலோ, கழுத்திலோ சின்னதாக ஒரு மச்சம் இருந்தால் அதை அழகு என கொண்டாடுகிறோம். அதுவே, மச்சத்துக்கு பதில் மரு வந்தால், கவலை கொள்கிறோம். எப்பாடு பட்டாவது அதை உடனே அகற்றிவிடத் துடிக்கிறோம்.
கடைகளில் விற்கப்படும் அமிலத்தன்மைமிக்க களிம்பை பூசுவது முதல் மருவை சுற்றி தலைமுடியை இறுக்கமாகக் கட்டி வைப்பது வரை வீட்டு சிகிச்சைகளை முயற்சி செய்வோரும் உண்டு. அதை எப்படி நீக்க வேண்டும்? சருமநல மருத்துவர்கள் கூறும் விளக்கம் என்ன?
“இது பெரும்பாலும் மரபியல் ரீதியாகவோ, ஹார்மோன்களின் சமநிலையின்மை காரணமாகவோ வருவது. இது பார்ப்பதற்கு மென்மையாக, குட்டி பலூன் போல இருக்கும். மிகச் சிறிய அளவிலிருந்து, பெரிதாக தொங்கும் அளவு வரை இது அளவில் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.
முகம், அக்குள், கழுத்து, தொடையிடுக்கு என சதை மடிப்புகள் உள்ள இடங்களில் இது அதிகம் வரும். கழுத்தில் செயின் அணிந்திருக்கும் சிலருக்கு அந்த உராய்தல் காரணமாக வரலாம். நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் பாதிப்பதைப் பார்க்கலாம்.
மருவைப் பிய்த்து எடுப்பதால், அது இன்னும் அதிகமாகப் பரவும். இது வைரஸ் தொற்று என்பதால் நம் உடலிலும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் பரவும்.
நம்மிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவும். மருவை அகற்றினால், மீண்டும் வருமா என்ற கேள்வி நிறைய பேருக்கு இருக்கிறது.
பெரும்பாலும் வர வாய்ப்பில்லை என்றாலும், நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளவர்கள், நீரிழிவு உள்ளவர்கள் போன்றோருக்கு அது மீண்டும் வரலாம்.
சின்னதாக இருக்கும்போதே மருவை நீக்க முறையான சிகிச்சை பெறுவதுதான் சிறந்தது. மருக்களை நீக்க, ஆசிட் வைப்பது போன்ற வீட்டு சிகிச்சைகளைப் பின்பற்றுவது ஆபத்தானது.
மருவைச் சுற்றி இறுக்கமாக முடி கட்டும் வழக்கம் இன்னும் சிலரிடம் இருக்கிறது. அப்படிச் செய்தால் அந்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைப்பட்டு மரு உதிர்ந்துவிடும் என்று நம்புகிறார்கள்.
இத்தகைய சிகிச்சைகள் எல்லாம் பிரச்னையை மேலும் தீவிரமாக்கலாம், இன்ஃபெக்ஷனை ஏற்படுத்தலாம். எனவே, சரும மருத்துவரை அணுகுவது நல்லது.
மருவின் மீது மட்டும் தடவும்படியான திரவ மருந்தை மருத்துவர் பரிந்துரைப்பார். இரவில் அதை மருவின் மேல் தடவிவிட்டு, மறுநாள் காலையில் கழுவிவிட வேண்டும். அது மெள்ள மெள்ள மென்மையாக மாறும்.
பிறகு சரும மருத்துவர் அதை ரேடியோ ஃப்ரீக்வன்சி (Radio Frequency) அல்லது எலக்ட்ரோகாட்டரி (Electrocautery) சிகிச்சையின் மூலம் முற்றிலும் அகற்றிவிடுவார்.
லிக்விட் நைட்ரஜன் பயன்படுத்திச் செய்யப்படுகிற க்ரையோதெரபி (Cryotherapy) மூலமாகவும் வைரஸின் மூலம் பரவும் மருக்களை நீக்கலாம்.”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : பொன்முடி வழக்கு விசாரணை முதல் வேட்டையன் அப்டேட் வரை!
கிச்சன் கீர்த்தனா : ஹெல்த்தி உருண்டை