திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட பட்டதாரி இளைஞனை பாத்திரம் கழுவ வைத்த சம்பவம் பேசு பொருளாகி உள்ளது.
பொதுவாகத் திருமண விழாவில் சிலர் அழையா விருந்தாளியாக சென்று உணவு சாப்பிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அப்படி உணவு உண்பவர்களில் சிலர் சிக்கிக் கொள்ளும் போது “நான் மாப்பிள்ளை வீட்டுக்காரர் அல்லது பெண் வீட்டுக்காரர்” என்றும் பொய் சொல்லித் தப்பித்து விடுவது வழக்கம்.
திருமண வீட்டாரும் அந்த விஷயத்தைப் பெரிதுபடுத்த மாட்டார்கள்.
ஆனால் மத்திய பிரேதசத்தில் ஒரு பட்டதாரி இளைஞர் அழையா விருந்தாளியாகச் சென்று உணவு சாப்பிட்டதால் திருமண வீட்டார் அவரை பாத்திரம் கழுவ வைத்துள்ளனர்.
மத்திய பிரதேசம் ஜபல்பூரைச் சேர்ந்த மாணவன் போபாலில் தங்கி எம்.பி.ஏ பயின்று வருகிறார். இவர் விடுதியில் தங்கிப் படித்து வருவதால் அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவிற்குச் சென்று நேற்று (டிசம்பர் 1)இரவு சாப்பிட்டுள்ளார்.
அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அவரை பிடித்த திருமண வீட்டார், அழைக்காமல் திருமணத்திற்கு வந்து சாப்பிடுகிறாயா என்று கூறி அவரின் விவரங்களைக் கேட்டுள்ளனர்.
அப்போது அவர் தான் அதே பகுதியில் தங்கி எம்.பி.ஏ படித்து வருவதாக கூறியுள்ளார். தொடர்ந்து திருமண வீட்டார் அவரை திருமண விழாவிற்கு உணவு சமைத்த பாத்திரத்தைக் கழுவுமாறு தண்டனை வழங்கியுள்ளனர்.
அதனை வீடியோ பதிவும் செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் “எம்.பி.ஏ படிக்கிறாய், உனக்கு பெற்றோர் செலவுக்குப் பணம் கொடுப்பதில்லையா? ஜபல்பூருக்கே நீ கெட்ட பெயரை வாங்கிக் கொடுத்துள்ளாய்” என்று மாணவனிடம் கேள்வி கேட்பது பதிவாகியுள்ளது.
”மேலும், உன்னை யார் அழைத்தார்கள். இலவசமாக உணவு சாப்பிட வந்தாயா. இதுதான் உனக்கு தண்டனை” என்றும் கூறியுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த சிலர் உணவு சாப்பிட்டதற்காகத் தண்டனை கொடுத்ததற்கு எதிராகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
மோனிஷா
மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வாய்ப்பு : மு.க.ஸ்டாலின்
குழந்தைகள் ஆபாச வீடியோ: திருச்சி நபர் மீது சிபிஐ வழக்கு!