trisha marriage with a malayalam producer

தயாரிப்பாளருடன் திருமணமா?: த்ரிஷா பதில்!

சினிமா டிரெண்டிங்

“என்னது த்ரிஷாவுக்கு திருமணமா?” என்பதுதான் கடந்த இரு நாட்களாக சமூக வலைதளங்களில் வலம் வரும் செய்தி.

தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்ததுடன் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் நடிகை த்ரிஷா. சென்னை அழகியாக 1999 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட த்ரிஷா தமிழ் சினிமாவில் கால் பதித்து ரஜினிகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

40 வயதை கடந்திருக்கும் த்ரிஷா தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல த்ரிஷாவுக்கும் இது 67ஆவது படமாகும். லியோ பட வேலையில் தற்போது த்ரிஷாவும் விஜய்யும் பிஸியாக இருக்கின்றனர்.

குறிப்பாக த்ரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் த்ரிஷாவின் மாதம் என்று கூட சொல்லலாம்.

அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் அக்டோபர் 6ஆம் தேதி ‘தி ரோடு’ படம் வெளியாகிறது. அக்டோபர் 19ஆம் தேதி லியோ வெளியாகிறது.

அதுபோன்று மலையாளத்திலும் பிஸியாக இருக்கிறார். மோகன்லாலுக்கு ஜோடியாக ‘ராம்’ என்ற படத்தில் நடித்துள்ளார் த்ரிஷா. இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இதுதவிர ஐடென்டிடி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
த்ரிஷா நடிப்பில் வெளியான ராங்கி படத்துக்கு முன்னதாக கமிட்டான பிருந்தா என்ற வெப் சீரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இவ்வாறு சினிமாவில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷாவின் திருமணம் பற்றிய செய்திகளும் அவ்வப்போது பேசப்பட்டு வருகின்றன.

ஏற்கனவே த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடு நடந்து அது சில காரணங்களால் நின்று போனது. இந்நிலையில் மலையாள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவருக்கும் த்ரிஷாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக கடந்த இரு நாட்களாக தகவல்கள் வலம் வந்தன.

ஆனால் அந்த தயாரிப்பாளர் யார் என்ற தகவல் இல்லை. இந்த தகவலுக்கு த்ரிஷாவோ, அவரது அம்மா உமாவோ எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. இதனால் பலரும் ட்விட்டரில் த்ரிஷாவிடம் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தசூழலில் இன்று (செப்டம்பர் 21) த்ரிஷா ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அதில், “டியர், நீங்களும், உங்கள் அணியும் யார் என்பது உங்களுக்குத் தெரியும். அமைதியாக இருங்கள் வதந்திகளை பரப்பாதீர்கள். சியர்ஸ்” என்று லியோ பட ஸ்டைலில் பதிலளித்துள்ளார்.

ஏற்கனவே ராங்கி படம் வெளியான சமயத்தில் செய்தியாளர்கள் திருமணம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்டு பதிலளித்தார்.

பொன்னியின் செல்வன் பட நிகழ்ச்சியில் த்ரிஷாவுக்கு எப்போது சுயம்வரம் என்று கேள்வி எழுப்பியதற்கு,  “என் உயிர் அவங்களோடு, என ரசிகர்களை நோக்கி கை காட்டிய த்ரிஷா இப்போது அப்படியே இருந்துட்டு போகட்டும்” என்று கூலாக பதில் சொன்னார். இந்நிலையில் தற்போது தனது திருமணம் குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

அதுபோன்று முன்னதாக ஒரு பேட்டியில், எனக்கும் திருமணம் எப்போது என்பது தெரியாது.  வாழ்க்கை முழுக்க சேர்ந்து வாழக்கூடிய ஒருவர் இவர்தான் என எனக்கு தோன்ற வேண்டும். திருமணம் செய்த பிறகு விவாகரத்து பெறுவதில் எனக்கு விருப்பம் இல்லை” என்று த்ரிஷா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியா

நாடாளுமன்றத்துக்கு குடியரசுத் தலைவரை அழைக்காதது ஏன்?: மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தங்கார்

கார் ஒட்டுநர் வங்கிக் கணக்கில் ரூ.9 ஆயிரம் கோடி : என்ன நடந்தது?

+1
1
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *