11,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கப் போவதாக மெட்டா நிறுவனம் இன்று ( நவம்பர் 9 ) அறிவித்துள்ளது.
அண்மையில் சமூக வலைதளங்களில் ஒன்றான ட்விட்டர் நிறுவனத்தை கைவசப்படுத்திய எலான் மஸ்க், ஏராளமான ஊழியர்களை பணி நீக்கம் செய்தார்.
இந்தநிலை இன்னும் மாறாத சூழலில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெட்டாவும் தற்போது அதிரடியாக ஆட்குறைப்பு நடவடிக்கையை தொடங்கியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்காக வருந்துகிறேன்
இதுதொடர்பாக, மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மார்க் ஜுக்கர் பெர்க், ”மெட்டா நிறுவன வரலாற்றில் நாங்கள் செய்த மிகவும் கடினமான சில மாற்றங்கள் தொடர்பாக தகவலை இன்று பகிர்கிறேன். எங்கள் குழுவின் வலிமையை சுமார் 13 சதவீதம் குறைக்கவும், 11,000க்கும் மேற்பட்ட எங்கள் திறமையான பணியாளர்களை விடுவிக்கவும் முடிவு செய்துள்ளேன்.
இது அனைவருக்கும் கடினமானது என்பதை நான் அறிவேன். குறிப்பாக இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நான் வருந்துகிறேன். குறிப்பிட்ட செலவினங்களைக் குறைப்பது மற்றும் முதல் காலாண்டு வரை ஆட்சேர்ப்பை நிறுத்தி வைப்பதன் மூலம் திறமையான நிறுவனமாக மாறுவதற்கு கூடுதல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறேன்” என அவர் கூறியுள்ளார்.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 16 வாரங்களுக்கான அடிப்படை ஊதியம் வழங்கப்படும் என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்