பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஜனவரி 9) இந்தூருக்கு வருகை தருவதை முன்னிட்டு, அம்மாநில பாஜக அரசு சார்பில் காய்ந்த புற்களுக்கு பச்சை வண்ண ஸ்பிரே அடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த 2014ம் ஆண்டு குஜராத் மாடல் என்று வார்த்தையை பாஜகவின் வெற்றிமந்திரமாக பயன்படுத்தி ஆட்சி கட்டிலில் அமர்ந்தார் பிரதமர் மோடி.
எனினும் அடுத்தடுத்த ஆண்டுகளில் குஜராத் மாடல் சமூக வலை தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
அனைத்திற்கு மேலாக கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி இந்தியா வந்த போது, அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து சபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் இருக்கும் குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் கட்டப்பட்டது.
பிரிட்டன் பிரதமர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குஜராத் வந்தபோதும் இதே சூழல் ஏற்பட்டது. அதன் பின்னர் இந்தியாவிற்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்கள் பெரும்பாலும் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து செல்லப்படும் மற்ற நாட்டுத் தலைவர்களின் கண்ணில் இருந்து குடிசைப் பகுதிகளை மறைக்கும்படி செய்வது வழக்கமான ஒன்றாக மாறி விட்டது.
சமீபத்தில் ஜி20 மாநாட்டையொட்டி மும்பையில் நடைபெறும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தந்த வெளிநாட்டு பிரதிநிதிகளை வரவேற்கும் விதமாக குடிசை பகுதிகளை மறைத்து பேனர்கள் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மத்தியபிரதேசம் மாநிலம் இந்தூருக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ள நிலையில், இதுபோன்ற ஒரு காட்சி மீண்டும் அரங்கேறியுள்ளது.
ஆனால் இந்த தடவை குடிசைக்கு பதிலாக காய்ந்த புற்களும், வெள்ளை துணிக்கு பதிலாக பச்சை பெயிண்டும் என காட்சி மாறியுள்ளது.
இளையோர் பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் 17வது பதிப்பு இந்தூரில் நடைபெற்று வருகிறது. அதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளார்.
இந்நிலையில் பிரதமர் செல்லும் வழியில் சாலையோரத்தில் உள்ள காய்ந்த புற்களை பசுமையாக்கும் முயற்சியில் புற்களுக்கு பச்சை ஸ்பிரே அடிக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பான வீடியோவை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.வி. ஸ்ரீனிவாஸ் ட்விட்டரில் பகிர்ந்து மத்தியபிரதேச மாநில பாஜக அரசின் மோசடித்தனத்தை விமர்சித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெக்கமின்றி ஒரு தலைவர் தனது நாட்டின் மக்களை முட்டாளாக்கி வருகிறார்” என்று பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் : ஹர்திக் பாண்டியா
”வட மாநிலங்கள் அனைத்திலும் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்” – ராகுல்காந்தி