பிளிப்கார்ட் செயலி மூலம் ரூ.79 ஆயிரம் கொடுத்து ட்ரோன் கேமிரா ஆர்டர் செய்தவருக்கு, 100 ரூபாய் மதிப்புள்ள குழந்தைகள் விளையாடும் கார் டெலிவரி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் சிவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மொய்தீன். இவர் ஏ.சி மெக்கானிக் தொழில் செய்து வருகிறார். இவரது நண்பர் சுரேஷிற்கு, ட்ரோன் கேமிரா தேவைப்பட்டதால் ஆன்லைனில் தேடியுள்ளார்.
அப்போது, பிளிப்கார்ட் செயலியில் ரூ.79,064 ரூபாய் மதிப்பில், ட்ரோன் கேமிரா இருந்துள்ளது. இதற்காக கிரெடிட் கார்ட் மூலம் பணம் செலுத்தி, கடந்த 20 ஆம் தேதி ஆர்டர் செய்துள்ளார்.
அதன்படி பார்சல் நேற்று (செப்டம்பர் 25) வந்தது.
பார்சல் மிகவும் இலகுவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மொய்தீன், சுரேஷ் ஆகிய இருவரும் பார்சலை வீடியோ பதிவுடன் பிரித்தனர்.
அந்த பார்சலில் ட்ரோன் கேமராவுக்கு பதில் 100 ரூபாய் மதிப்புள்ள பொம்மை கார் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும், பார்சல் டெலிவரி செய்த நபருக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை.
பின்னர் இந்த சம்பவம் குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திடம் புகார் அளித்தனர். பிளிப்கார்ட் நிறுவனம் இதுகுறித்து விசாரணை நடத்துவதாக அவர்களிடம் தெரிவித்துள்ளது.
ரூ.79 ஆயிரம் மதிப்பில் ட்ரோன் கேமரா ஆர்டர் செய்தவருக்கு, குழந்தைகள் விளையாடும் காரை பிளிப்கார்ட் நிறுவனம் டெலிவரி செய்தது இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
செல்வம்
ராஜஸ்தான் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி: சோனியா போட்ட உத்தரவு!