தேசிய நெடுஞ்சாலையில் தரையிறங்கி விபத்தில் சிக்கிய விமானத்தின் திகிலூட்டும் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
மலேசியாவின் லங்காவி தீவில் இருந்து சுபாங் விமான நிலையத்துக்கு தனியாருக்கு சொந்தமான இலகு ரக விமானம் ஒன்று நேற்று (ஆகஸ்ட் 17) புறப்பட்டது. இதில் இரு விமானிகள் உள்பட 8 பேர் பயணம் செய்தனர். ஆனால் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.
இதனால் அந்த விமானத்தை உடனடியாக தரையிறக்க விமானி முயன்றார். அதன்படி சிலாங்கூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விமானத்தை தரையிறக்க அவர் முயற்சி செய்தார்.
நெடுஞ்சாலையில் இறங்கியபோது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மீது விமானம் மோதியது. இதில் விமானம் வெடித்து சிதறி சுக்குநூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் சிக்கி காரில் வந்த இருவர் மற்றும் விமானத்தில் பயணித்த 8 பேர் உள்பட 10 பேரும் உயிரிழந்தனர்.
இதில் மத்திய பகாங் மாநிலத்தில் வீட்டுவசதி மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பொறுப்பான மாநில சட்டமன்ற உறுப்பினர் ஜோஹாரி ஹருன் கொல்லப்பட்ட விமானப் பயணிகளில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே தேசிய நெடுஞ்சாலையில் வந்திறங்கிய விமானம் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் மோதுவது போன்ற காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
https://twitter.com/aviationbrk/status/1692138280358191371?s=20
அதே நெடுஞ்சாலையில் பயணித்த காரின் டேஷ்கேமில் பதிவான வீடியோவில், படுவேகத்தில் பறந்து வந்த விமானம் சாலையில் விழுந்து வெடித்து, ஒரு பெரிய தீ பிளம்பாக வெடித்து சிதறும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
கிறிஸ்டோபர் ஜெமா