தெருநாய் தொல்லை: தீர்வு கூறி சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ
தொல்லைத் தரும் தெருநாய்களை பிடித்து நாய்கறி விரும்பி சாப்பிடும் அஸ்ஸாமுக்கு அனுப்புங்கள் என்று மகாராஷ்டிரா எம்எல்ஏ கூறிய கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சமீபகாலமாக இந்தியாவில் உள்ள பல்வேறு நகரங்களில் தெருநாய்கள் குழந்தைகளை கடித்து உயிரிழந்து வருவதாக சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகின்றன.
மஹாராஷ்டிராவிலும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் அவற்றை கட்டுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுதொடர்பாக சிவசேனா எம்.எல்.ஏ. பிரதாப் சர்நாயக் மற்றும் பாஜக எம்.எல்.ஏ. அதுல் பட் கல்கர் ஆகியோர் மஹாராஷ்டிரா சட்டமன்றத்தில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அப்போது மஹாராஷ்டிரா எம்.எல்.ஏ.வும், பிரஹர் ஜனசக்தி கட்சியின் தலைவருமான பச்சு காடு, தெருநாய் தொல்லைக்கு தீர்வாக சட்டசபையில் சர்ச்சைக்குரிய ஆலோசனையை வழங்கினார்.
அவர் பேசுகையில், “அசாம் மக்கள் நாய்கறியை விரும்பி உட்கொள்கின்றனர். அங்கு நாய்கறிக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ள நிலையில் அவை ரூ.8,000 முதல் ரூ.9,000 வரை விற்பனையாகின்றன.
எனவே நம் மாநிலத்தில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த, அவற்றை பிடித்து அஸ்ஸாமுக்கு அனுப்ப வேண்டும். இந்த சோதனையை ஒரே நகரத்தில் தொடங்க வேண்டும்” என்று கூறினார்.
பச்சுகாடு பேசிய அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அவரது கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன.
எம்.எல்.ஏவின் கருத்து இழிவானது, மனிதாபிமானமற்றது என்று சமூக மற்றும் விலங்கு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். அசாம் மாநில மக்களை புண்படுத்தும் வகையில் இது தொடர்பாக அசாம் அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு உத்தவ்தாக்கரே தலைமையிலான ஆட்சியை கலைக்க, தனது ஆதரவாளர்களுடன் அசாம் வந்த ஏக்நாத் ஷிண்டே குழுவில் பச்சு காடும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
திராணி இருந்தால்… : தமிழ்நாடு அரசுக்கு அண்ணாமலை சவால்
போக்சோவில் கைதான அதிமுக கவுன்சிலர் கட்சியிலிருந்து நீக்கம்!