வர வர 90 கிட்ஸ் நெலம ரொம்ப மோசமா போகுதுன்னு யாராச்சும் சொன்னாங்கனா, அது எவ்வளவு உண்மை என்பதற்கு மேல இருக்குற இந்த போஸ்டர் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
சமீபகாலமாக 90’ஸ் கிட்ஸ் அதாவது 1990 – 1999 ஆண்டிற்கு நடுவே பிறந்த இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது என்பது பெரும்பாடாக பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்கெனவே பல மீம்ஸ்களும் விவாதங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்த நிலையில் தான் திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி கிராமத்தில் உள்ள 90’ஸ் கிட்ஸ் இளைஞர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
அதில், “வன்மையாக கண்டிக்கிறோம்!! ஊரில் திருமண வரன்களை தடை செய்பவர்களே!! நீ எத்தனை வருசம் நல்லா வாழ்ந்துருவ? உன் பிள்ளைக்கு இந்த மாரி வந்தா? கல்யாணத்தை கெடுக்க நினைக்கிறாயே? புறம் பேசி தடுக்க நினைக்கிறாயே? ஒருத்தனுக்கு நல்லது நடக்கிறதை கெடுக்க நினைக்கிறீயே நல்லா இருப்பியா நீ?” என ஏராளமான எழுத்துப் பிழைகளுடன் அந்த போஸ்டர் அச்சிடப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பு என குறிப்பிட்டு, ”சில நபர்களின் அடையாளம் தெரியும். அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும்” எனவும் திருமணத்தை நிறுத்த நினைப்பவர்களுக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளனர்.
இன்றைய காலகட்டத்தில் வசதி படைத்தவர்கள் தங்கள் வீட்டு பிள்ளைக்கு வரன் பார்க்கும்போது, டிடெக்டிவ் ஏஜென்சிகள் மூலம் விசாரித்து சம்பந்தப்பட்ட ஆண் அல்லது பெண் குறித்த விவரங்களை அறிந்து கொள்கின்றனர். இதற்கென்ற நகரங்களில் பல டிடெக்டிவ் ஏஜென்சிகள் உள்ளது.
அதே வேளையில் கிராமங்களை பொறுத்தவரை, ஊரில் உள்ளவர்கள்.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் தான் இன்ஃபார்மர்கள். அப்படிப்பட்ட கிராமங்களில் ஒன்றான பொன்னாக்குடியில் ஏதேனும் திருமணம் நிச்சயிக்கப்பட்டால், உடனடியாக அவர் குறித்து தவறான தகவல்களை அனுப்பி திருமணத்தை நிறுத்துவதை ஒருசிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று அங்குள்ள இளைஞர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பொன்னாக்குடியில் இப்படிப்பட்ட இன்பார்மர்களால் சுமார் 50க்கு மேற்பட்ட இளைஞர்களின் திருமணம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது போஸ்டர் ஒட்டி எச்சரிக்கும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மலை கிராமம் டூ என்.ஐ.டி… அறுபது வருட கனவை நனவாக்கிய ‘அசுர’ மாணவிகள்!
திகிலூட்டும் ஹன்சிகா… காந்தாரி ட்ரெய்லர் எப்படி?