சமீப காலமாக வழக்கமான பாக்கெட் பால் உபயோகிப்பதைத் தவிர்த்துவிட்டு லாக்டோஸ்ஃப்ரீ பாலை பயன்படுத்துகிறார்கள். ‘அந்தப் பால் உபயோகிப்பதுதான் ஆரோக்கியமானது, வழக்கமான பால் நல்லதல்ல’ என்றும் கூறுகிறார்கள். அதென்ன லாக்டோஸ்ஃப்ரீ பால்… அதில் அப்படி என்னதான் ஸ்பெஷல்? வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்ஸ் சொல்லும் விளக்கம் என்ன?
“சிலருக்கு பால் குடித்ததும் அல்லது பால் பொருட்களைச் சாப்பிட்டதும் உடனடியாக வயிற்றுப்போக்கு ஏற்படலாம் அல்லது வயிற்றைக் கசக்கிப் பிடிக்கிற மாதிரி உணர்வு ஏற்படும். வயிற்று உப்புசம் ஏற்படலாம். வாயு சேர்ந்துகொண்டது போல உணரலாம்.
இப்படிப்பட்ட அறிகுறிகள் இருந்தால், அவர்கள் தங்களுக்கு ‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ (Lactose intolerance) இருப்பதாகச் சந்தேகப்படலாம். முதல் வேலையாக அவர்கள் வழக்கமான பால், அதாவது லாக்டோஸ் சேர்த்த பால் குடிப்பதை நிறுத்திவிட்டு, லாக்டோஸ்ஃப்ரீ பாலுக்கு மாறலாம்.
மற்றபடி லாக்டோஸ்ஃப்ரீ பால் குடிப்பதை ஒரு ஃபேஷனாகவோ, டிரெண்டாகவோ நினைத்து எல்லோரும் அதைப் பின்பற்றத் தேவையில்லை. பசும்பாலோ, எருமைப்பாலோ எதுவானாலும் நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் பால் உங்களுக்கு ஏற்றுக் கொள்ளும்போது, அதையே குடிக்கலாம்.
பாலில் உள்ள லாக்டோஸ் என்ற மூலக்கூறு ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு மட்டும்தான் அது ஒவ்வாமைக்கான அறிகுறிகளைக் காட்டும். மற்றவர்கள் அதைக் குடிக்கலாம்” என்று அறிவுறுத்துகிறார்கள்.