காலையில் செய்த இட்லி மீந்துவிட்டால் அதை உப்புமாவாக்கி விடுபவர்கள் நம்மில் பலருண்டு. அதே இட்லியில் இறாலையும், புரொக்கோலியையும் சேர்த்து இந்த ஸ்பைஸி இறால் புரொக்கோலி இட்லி உப்புமா செய்து கொடுத்து பாருங்களேன்… இன்னும் கொஞ்சம் கேட்பார்கள்; அடுத்த முறையும் இதேபோல் செய்ய சொல்வார்கள்.
என்ன தேவை?
காய்ந்த மிளகாய் – 2
பொடியாக நறுக்கிய இஞ்சி – ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு – ஒரு டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கவும்)
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்)
பொடியாக நறுக்கிய புரொக்கோலி – அரை கப்
இறால் – 10-15 (பொடியாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
இட்லி – 8-10
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் – சிறிதளவு
எலுமிச்சைச்சாறு – அரை முதல் ஒரு டீஸ்பூன் வரை (விருப்பப்பட்டால்)
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
எப்படிச் செய்வது?
பானில் (pan) எண்ணெயைச் சூடாக்கி காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பிறகு வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, கண்ணாடி போல் பளபளப்பாகும் வரை வதக்கவும். இதனுடன் புரொக்கோலி சேர்த்து வதக்கி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்துக் கலக்கவும். பொடியாக நறுக்கிய இறாலைச் சேர்த்து குலுக்கி, ஒரு நிமிடம் வேகவிடவும். இதற்கிடையே இட்லிகளை அரை நிமிடம் தண்ணீரில் நனைத்து எடுத்து உதிர்க்கவும். உதிர்த்த இட்லியை இறால் கலவையுடன் சேர்த்து, இதனுடன் உப்பு சேர்த்துக் கிளறி இரண்டு நிமிடங்கள் வேகவிடவும். கொத்தமல்லி இலை தூவி இறக்கி, எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஐபிஎல் ஏல பரிதாபங்கள் : அப்டேட் குமாரு
ராமதாஸை இன்சல்ட் செய்த ஸ்டாலின்… ’வேலை’யைக் காட்ட பாமக திட்டம்!