கிச்சன் கீர்த்தனா – சண்டே ஸ்பெஷல்: பால் சேர்த்த… பால் சேர்க்காத காபி, டீ… உங்களுக்கு எது பிடிக்கும்?

Published On:

| By Selvam

டீ, காபி பழக்கம் உள்ளவர்களுக்கு காலையில் எழுந்து ஒரு கப் குடித்தால்தான் அன்றைய நாளே தொடங்கும். தலைவலித்தாலும், சோர்வாக இருந்தாலும், டென்ஷனாக இருந்தாலும் உடனே நாடுவது டீ, காபியைதான். இந்த நிலையில் பால் சேர்த்த, பால் சேர்க்காத டீ, காபி இவற்றில் எது பெஸ்ட்?  விளக்கம் தருகிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.

பால் சேர்த்த டீ, உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். டீயில் காணப்படும் ‘பாலிபினால்’ என்ற ரசாயனம் உடலில் வைட்டமின் டி உற்பத்தியாக உதவும். இதனால் எலும்பு இழப்பு, எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவது தாமதமாகும். ஜீரணத்துக்கு உதவும். ரத்த அழுத்தத்தை மேம்படுத்தும். பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் பாலிபினால்ஸ், பற்களின் ஆரோக்கியத்துக்கு உதவும். மேலும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவும்.

பால் சேர்க்காத பிளாக் டீயில் காணப்படும் ‘திஃபிளேவின்ஸ்’ (Theaflavins) என்ற ரசாயனம் கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவும். மேலும், அதில் காணப்படும் ‘ஃபிளேவனாய்ட்ஸ்’ (Flavonoids) என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் இதயநோய்களுக்கான வாய்ப்பைக் குறைக்க உதவும். பால் சேர்க்கப்படாததால் கலோரியின் அளவு குறைவாக இருக்கும். அது எடையை நிர்வகிக்க உதவும்.

பால் சேர்த்த காபியில்… கஃபைன் அதிகம் இருப்பதால் சில நன்மைகளும் உண்டு. அதே நேரத்தில் அதை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது சில பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் கஃபைன் ரத்தச் சர்க்கரையை நிர்வகிக்க உதவும். டிஎன்ஏ தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் தன்மை உள்ளது என்பதால் கர்ப்ப காலத்திலும் பெண்கள் காபி எடுத்துக்கொள்ளலாம்.

தினமும் ஒரு கப் காபி எடுத்துக்கொண்டால் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கஃபைனில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் சருமம் வறண்டு போகாமல் தடுக்கும், முடி உதிர்வைத் தடுக்கும். ஆனால், கஃபைன் அதிகமாக எடுக்கும்போது இதயத்துடிப்பு அதிமாகும், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும். இரவு நேரத்தில் காபி குடித்தால் உறக்கம் வராது. ஒருநாளைக்கு அதிகபட்சமாக 250 மில்லிகிராம் கஃபைன் வரை எடுத்துக்கொள்ளலாம்.

பால் சேர்க்கப்படாத காபியில் கலோரி குறைவாக இருக்கும். ஆன்டிஆக்ஸிடன்ட், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. பொட்டாசியம் உள்ளதால் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும். அதேநேரம், பிளாக் காபி, டீயுடன் லெமன் சேர்த்துக் குடிக்கும்போது வைட்டமின் சி சத்தும் கிடைக்கும். இதனால் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரிக்கும்.

ஒப்பீட்டளவில் பால் சேர்க்காத டீ எடுத்துக்கொள்வது நல்லது. எடையை நிர்வகிக்க உதவும். சர்க்கரை நோயாளிகள், பக்கவாத நோயாளிகள், கர்ப்பிணிகள் என அனைவரும் எடுத்துக்கொள்ளலாம்.

டீ, காபியை பொறுத்தவரை பெரியவர்கள் அதிகபட்சம் ஒருநாளைக்கு 2 முதல் 3 கப் வரை எடுத்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை சேர்க்காமல் காபி, டீ எடுத்துக்கொள்வது நல்லது. அதிக அளவு சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். எனவே, 100 முதல் 150 மில்லி காபி, டீக்கு 3 முதல் 5 கிராம் வரை சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம். மாலை 6 மணிக்கு மேல் காபி, டீயைத் தவிர்ப்பது நல்லது” என்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இப்படி ஒரு சட்டம் இருந்தா நல்லாருக்கும்ல: அப்டேட் குமாரு

தடைகள் தாண்டி வெற்றி… ஹேமந்த் சோரனுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel