திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் நடிகை கீர்த்தி சனோனுக்கு ஆதிபுருஷ் இயக்குனர் ஓம் ராவத் முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இயக்குனரின் இந்த செயலுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் 3 டி முறையில் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம்” ஆதிபுருஷ்”. இந்த படம் ஜூன் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இந்த படத்தின் விழா ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள தாரகா ராமா மைதானத்தில் மிகபிரமாண்ட முறையில் நேற்று(ஜூன் 6) நடைபெற்றது.
இதற்காக திருப்பதி வந்த நடிகர் பிரபாஸ் நேற்று அதிகாலையில், திருப்பதி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்.
இதையடுத்து இன்று(ஜூன் 7)ஆதிபுருஷ் படத்தின் இயக்குனரும், நடிகை கீர்த்தி சனோனும் திருப்பதி கோவிலுக்கு சென்றிருந்தனர். இருவரும் சாமி தரிசனம் செய்த பின்னர் அவர்களுக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதையடுத்து வெளியே வந்த இருவரும், ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் காரில் ஏறி கிளம்ப சென்ற நடிகை கீர்த்தி சனோனை வழியனுப்ப இயக்குனர் ஓம் ராவத் காரின் அருகே நின்றுகொண்டிருந்தார்.
அப்போது அவரை மரியாதை நிமித்தமாக கட்டிப்பிடிக்க வந்த நடிகை கீர்த்தி சனோனுக்கு இயக்குனர் ஓம் ராவத் சட்டென முத்தம் கொடுத்துவிட்டார்.
ஆதிபுருஷ் இயக்குனரின் இந்த செயல் இணையத்தில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இந்நிலையில், இயக்குனரின் இந்த செயலுக்கு ஆந்திர மாநில பாஜக தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
ஆந்திர பாஜக மாநிலச் செயலாளர் ரமேஷ் நாயுடு இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “உங்கள் கோமாளித்தனங்களை புனிதமான இடத்திற்கு கொண்டுவருவது அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பானு பிரகாஷ் ரெட்டி Tv9 தொலைக்காட்சியில் இன்று பேசியபோது, ”கட்டிப்பிடிப்பது, முத்தமிடுவது, பறக்கும் முத்தம் கொடுப்பது போன்ற தகாத செயல்களின் ஈடுபடுவது திருமலை திருப்பதி கோவிலின் மரபுகளுக்கு எதிரானது.
இது வெங்கடேசப் பெருமானின் பல பக்தர்களின் மனதை புண்படுத்தியுள்ளது, மேலும் நடிகை , திரைப்பட இயக்குனர் இப்படி நடந்து கொண்டதற்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஒரு புனிதமான இடம், ஷூட்டிங் ஸ்பாட் அல்ல. திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் இதை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
வேலுமணி டெண்டர் வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
மத்திய அமைச்சரை சந்தித்த சாக்ஷி மாலிக்: நடந்தது என்ன?