தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் கடந்த சில தினங்களாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி வந்த அரிசிக்கொம்பன் யானை இன்று பிடிப்பட்டது.
அரிசிக்கொம்பன் தேனிக்குள் வந்தது முதல் அதனை மக்கள் வழியனுப்பி வைத்தது முதல் என்ன நடந்தது. இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.
சின்ன கொம்பன் டூ அரிசிக்கொம்பன்
இந்த யானை 1986 அல்லது 1987ல் பிறந்திருக்கலாம் என வனத்துறையால் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சின்னகொம்பன் என அழைக்கப்பட்டு வந்த இந்த யானை 2010 முற்பகுதியில் இருந்து ரேஷன் கடைகள், மளிகை கடைகள், வீடுகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை தின்று வந்துள்ளது.
இதனால் கேரளாவில் அரிக்கொம்பன் என அழைக்கப்படுகிறது. அரி என்றால் அரிசி. தமிழகத்தில் அரிசிக்கொம்பன் என்று அழைக்கப்படுகிறது.
கேரள மாநிலம் மூணாறுக்கு அருகில் உள்ள சின்னக்கனாலில் உள்ள தனது வாழ்விடம் அருகே உள்ள வீடுகள், கடைகளுக்கு அடிக்கடி அரிசி தேடி வந்து சேதப்படுத்தியிருக்கிறது.
“301 காலனி” என்று அழைக்கப்படும் பழங்குடியினர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடுகளையும் கடைகளையும் வேட்டையாடியது. அந்த பகுதி மக்களின் கூற்றுபடி, , அரிசிக்கொம்பன் தாக்கியதில் இதுவரை பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் அரிசிக்கொம்பனை பிடிக்க கடந்த ஆண்டு கேரள அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து விலங்குகள் நல ஆர்வலர்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கில், யானையை பிடிக்க அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதனை சிறை பிடிக்கக் கூடாது. பாதுகாப்பாக பிடித்து அதன்மீது ரேடியோ காலர் பொறுத்தி வேறு இடத்தில் விட்டுவிடுங்கள் என்று கூறியது.
இந்த யானையை சின்னக்கானலில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ள பாலக்காடு அருகே பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்திற்கு மாற்ற கேரள உயர் நீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு பரிந்துரை செய்தது. அதன்படி, பரம்பிக்குளத்திற்கு யானை கொண்டு வரப்படுகிறது என்ற தகவலறிந்து அந்த பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு நகர்ந்தது எப்படி?
இந்நிலையில் அரிசிக்கொம்பனை பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டு ஏறத்தாழ 40 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 29 அன்று பிடிக்கப்பட்டு மாற்று இடத்துக்கு கொண்டு வரப்பட்டது. பரம்பிகுளத்துக்கு பதிலாக சின்னக்கானலில் இருந்து நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடுக்கி அருகே பெரியாறு புலிகள் காப்பக வனப்பகுதிக்குள் யானையை விட்டனர்.
இந்தசூழலில் அரிசிக்கொம்பன் யானை, மாவடி வனப்பகுதிக்கு மேல் உள்ள மேதகானமெட்டு வனப்பகுதி வழியாக தமிழக வனப்பகுதியான மேகமலை மற்றும் குமுளி ரோஜாப்பூ கண்டம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்றது.
தொடர்ந்து கம்பம் நகருக்குள் புகுந்த அரிசிக்கொம்பன் யானை தெருக்கள், சாலைகளில் சென்றவர்களை விரட்டி துரத்தியது.
தமிழக பகுதிக்குள் யானை நடமாடிய நிலையில் கேரள வனத்துறையிடம் இருந்து அரிசிக்கொம்பன் வந்த புவியிடங்காட்டி விவரங்களை கேட்டு வாங்கியது தமிழக வனத்துறை. அதோடு பயணிகளின் பாதுகாப்புக்காக 06.05.2023 முதல் மேகமலைக்கு செல்வதற்கு நுழைவாயிலாக இருக்கும் தென்பழனி சோதனைச்சாவடியை மூடி தடை விதித்தது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. மேகமலை சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
தொடர்ந்து யானையின் கழுத்து பகுதியில் உள்ள ரிசிவர் கருவியில் செயற்கைக்கோள் மூலமாக கிடைக்கும் சமிக்ஞைகளை வைத்து அதனை வனத்துறையினர் இரவு பகலாக கண்காணித்து வந்தனர். 12 வனத்துறை குழுவினர் யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
யானையை பிடிக்க வனத்துறை போராடி வந்த நிலையில் சில இளைஞர்கள் அது இருக்கும் இடத்தை நோட்டமிட்டு அந்த பகுதியில் ட்ரோன் கேமராவை பறக்கவிட்டனர். இதன் காரணமாக கம்பம் அருகே காந்திநகர் காலனி வாழைப்பழ தோப்பில் தஞ்சமடைந்திருந்த யானை வேறு பகுதிக்கு சென்றது. இதனால் யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க சிரமம் ஏற்பட்டதையடுத்து ட்ரோன் பறக்கவிட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஊர் மக்களை கட்டுப்படுத்துவதற்காக அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டனர். யானையிடம் இருந்து பொதுமக்களை காப்பாற்ற கம்பம் முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டது.
அதுபோன்று ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் யானையை நிலைநிறுத்த வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை என மூன்று துறைகளை சேர்ந்தவர்கள் இரவு பகலாக முயற்சி செய்தனர்.
ஆனால் தொடர்ந்து இடம் பெயர்ந்துகொண்டே இருந்த அரிசிகொம்பன் கடந்த மே 28ஆம் தேதி சுருளிப்பட்டி அருகே உள்ள யானைகஜம் பகுதிக்கு சென்று அங்கிருந்த விளை நிலங்களை சேதப்படுத்தியது.
பிடிபட்ட யானை
சுருளிப்பட்டி கிராமத்தில் இருந்த போது அதன் மீது மயக்க மருந்து செலுத்திப் பிடிக்க கால்நடை மருத்துவ குழுவினரை வரவழைத்தனர். அரிசி ராஜா, சுயம்பு மற்றும் உதயன் ஆகிய கும்கி யானைகளும் வரவழைக்கப்பட்டன.
இந்நிலையில் நேற்று சண்முகா நதி அணையை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் நடமாடிய அரசிக்கொம்பன் நள்ளிரவு சின்ன ஓவுலாபுரம் பகுதியில் உள்ள வனபெருமாள் கோயில் வனப்பகுதியில் நின்றது. அப்போது அதனை பின் தொடர்ந்த வனத்துறை அதிகாரிகள், மருத்துவக் குழுவினர் ஆலோசனைப் படி மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், கம்பம் வனச்சரகர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 கும்கி யானைகளை சின்ன ஓவுலாபுரம் வன பெருமாள் கோயில் வனப்பகுதிக்கு கொண்டு வந்து, அங்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட அரிசிக்கொம்பனை கும்கி யானைகள் உதவியுடன் பிரத்தியேக வாகனத்தில் வனத்துறையினர் ஏற்றினர்.
இன்று அதிகாலையிலேயே அரிசிக்கொம்பன் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுகிறது என்ற தகவலை அறிந்து ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று தங்களது கைபேசியில் புகைப்படம் எடுத்து அனுப்பி வைத்தனர்.
நீதிமன்றத்தில் அரிசிக்கொம்பன்
இந்நிலையில் அரிசிகொம்பனை பிடித்து அடர்ந்த காட்டில் விடுவதற்கு உத்தரவிட வேண்டும் என்று தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த பேராசிரியர் கோபால் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில், “திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே உள்ள களக்காடு, முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிகளில் அரிசிக் கொம்பன் யானை விடப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், “யானைகளின் வலசைப் பாதைகளை ஆக்கிரமிப்பதாலேயே, அவை ஊருக்குள் நுழைகின்றன” என்று கருத்து தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
அரிக்கொம்பனை இங்கே விடக் கூடாது!
நீதிமன்றத்தில் அரசு தெரிவித்தபடி முண்டந்துறை புலிகள் சரணாலய பகுதிக்கு அரிசிக்கொம்பன் அழைத்து சென்று கொண்டிருக்கும் போது இந்த பகுதியில் விடக் கூடாது என மணிமுத்தாறு பகுதியில் பொது மக்களும், எஸ்டிபிஐ கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இங்கே யானையை விட்டால் ஒரு மணி நேரத்தில் கீழே இறங்கி ஊருக்குள் புகுந்துவிடும். ஏற்கனவே களக்காடு பகுதியில் விலங்குகள் மனிதர்களை தாக்குவது அடிகடி நடக்கிறது. எனவே இந்த பகுதியில் விடக்கூடாது என கூறி முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனிடையே மீண்டும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ரபேக்கா ஜோசப் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் யானையை கேரள வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதை கேட்ட நீதிமன்றம் மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
ஆனால் அதுவரை மயக்க ஊசி செலுத்திய நிலையில் இருக்கும் யானையை வனத்துறையினர் எங்கு பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்? அல்லது முண்டாந்துறை காட்டிலேயே விட்டுவிடுவார்களா?. இல்லையெனில் மீண்டும் மயக்க ஊசி செலுத்தி வைத்திருப்பார்களா?. என பல கேள்விகள் எழுந்துள்ளன. இதற்கு வனத்துறையிடமிருந்து இன்னும் எந்த பதிலும் இல்லை.
கேரளாவிலும் சரி, தமிழகத்திலும் சரி காட்டுப்பகுதிக்குள் விட்டால் மீண்டும் மீண்டும் ஊருக்குள் புகும் அரிசிக்கொம்பனை கும்கி யானையாக மாற்ற வேண்டும் என்று விலங்குகள் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
முன்னதாக கோவை சுற்றுவட்டார பகுதியில் 2019 காலக்கட்டத்தில் அரிசி ராஜா யானை மக்களை அச்சுறுத்தி வந்தது. அதை பிடித்து மீண்டும் காட்டுக்குள் விட்டாலும் மீண்டும் ஊர் பகுதிக்குள் நுழைந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த யானை தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்த யானையை பிடித்த தமிழ்நாடு வனத்துறையினர் வரகாளியார் யானை முகாமில் விட்டு கும்கி யானையாக பயிற்சி கொடுத்தனர். தற்போது கும்கியாக மாறியுள்ள இந்த அரிசிராஜாதான், அரிக்கொம்பனை பிடிக்க உதவிய மூன்று கும்கி யானைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
தமிழகம் வரும் அமித் ஷா: எதற்காக ?
டிஜிட்டல் திண்ணை: ’கூட்டணி’யை வெளிச்சம் போட்டுக் காட்டிய அண்ணாமலை பிறந்தநாள்!