கிச்சன் கீர்த்தனா: காஷ்மீரி சாகு!
தமிழகத்தில் தொடங்கி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என எல்லா மாநில உணவுகளையும் ஓரளவு ருசித்திருப்பீர்கள். ஒரு மாறுதலுக்கு காஷ்மீர் உணவுகளை ருசிக்க இந்த வார வீக் எண்டுக்கு உங்கள் வீட்டில் காஷ்மீரி விருந்து வைத்து அசத்துங்களேன்.
என்ன தேவை?
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
பனீர் – 100 கிராம் (சதுரத் துண்டுகளாக்கவும்)
ஏதாவது ஒரு வகை கீரை – ஒரு கட்டு (பொடியாக நறுக்கி, நீரில் அலசவும்)
வெந்தயக்கீரை – ஒரு கட்டு (ஆய்ந்து, நீரில் அலசவும்)
சீரகம் – ஒரு டீஸ்பூன்
வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
கடைந்த தயிர் – அரை கப்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
சுக்குத்தூள் – ஒரு டீஸ்பூன்
சோம்புத்தூள் – ஒன்றரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
காய்ச்சி ஆறவைத்த பால் – அரை கப்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் (பனீரைப் பொரிப்பதற்கு) – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடாயில் எண்ணெயைக் காயவிட்டு பனீர் துண்டுகளைச் சேர்த்துப் பொரித்தெடுத்துத் தனியாக வைக்கவும். மற்றொரு கடாயில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய்விட்டு கீரை, வெந்தயக்கீரை சேர்த்து வதக்கவும். அதனுடன் கால் கப் தண்ணீர்விட்டு வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் விழுதாக அரைத்தெடுக்கவும். மீதமுள்ள எண்ணெயைக் கடாயில்விட்டு சீரகம், வெங்காயம் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கி, இஞ்சி – பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அதனுடன் தயிர் சேர்த்துக் கலக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், சோம்புத்தூள், சுக்குத்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு அரைத்த கீரை விழுது, பால், உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். பிறகு கரம் மசாலாத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்கவிடவும். இறுதியாகப் பொரித்த பனீர் துண்டுகள் சேர்த்து கிரேவி பதத்துக்கு வரும்போது இறக்கி, சூடாக சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: முளைகட்டிய வெந்தய ரைத்தா!
கிச்சன் கீர்த்தனா : கலர்ஃபுல் குடமிளகாய் மிக்ஸ்
டிஜிட்டல் திண்ணை: எடப்பாடியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா? நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
ஆம்ஸ்ட்ராங் கொலை… சிக்கப் போகும் அரசியல் புள்ளி!