மூத்த நடிகரான மெளலி என்று நினைத்து ரசிகருடன் உரையாடல் நடத்திய நடிகர் கமல்ஹாசனின் ட்விட்கள் பலரையும் ரசிக்க வைத்துள்ளன.
ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளுள் ஒன்றாக பிக்பாஸ் ஷோ உள்ளது. கடந்த 5 சீசனிலும் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தான் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
20 போட்டியாளர்கள் பங்கேற்பு!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், கேபிஒய் அமுதவாணன், விஜே மகேஸ்வரி, சீரியல் நடிகை ஆயிஷா, ரச்சிதா (எ) மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், விஜே விக்ரமன், உள்ளிட்ட 20 நபர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு போட்டியாளர் என்ற முறையில், பார்வையாளர்களின் ஓட்டுக்கேற்ப குறைவான வாக்குகளை பெற்றவர் வெளியேற்றப்படுவர்.
அந்தவகையில் இதுவரை சாந்தி, ஜி.பி.முத்து, அசல் ஆகியோர் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர்.
வார இறுதியில் கமல்!
நிகழ்ச்சியின் விதிப்படி வாரத்தின் 5 நாட்களில் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களுக்கு பல்வேறு சவால்கள், சண்டை, கலகலப்பு, உரையாடல்கள் ஆகியவை நடக்கும்.
அதனை தொடர்ந்து வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கமல்ஹாசன் போட்டியாளர்களுடன் உரையாடுவார். அப்போது கடைசி 5 நாட்களில் நடந்த பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்களுடன் விவாதிப்பார்.
அதன்படி கடந்த வாரம் போட்டியாளர்களில் ஒருவரான திருநங்கை ஷிவின் கணேசனைப் போல் இமிடேட் செய்த அசீமை கமல் லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கி உள்ளார்.

அசீமை வெளுத்து வாங்கிய கமல்!
வாரநாட்களில் நடந்த வாக்குவாதத்தில் ஷிவினைப் போல் அசீம் இமிடேட் செய்து அவரின் உடல் மொழியை கேலி செய்தார். அதைப்பார்த்து கடுப்பான நெட்டிசன்கள் அசீமை வெளியில் அனுப்ப வேண்டும் என ட்விட்டரில் கண்டனங்களை பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமையன்று நடந்த எபிசோடில் ஒரு முடிவுடன் வந்த கமல்ஹாசன் அசீமை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டார். கமல் கேட்ட பல கேள்விகளுக்கு அசீமால் பதில் சொல்லவே முடியவில்லை.
அதோடு, நிற்காமல், ”அசீம் உங்களிடம் நான் எதையும் கேட்க விரும்பவில்லை. நீங்கள் என்ன சொல்ல போகிறீர்கள் என்பது எனக்கு தெரியும். நான் உங்களை விமர்சிக்கவில்லை, கண்டிக்கிறேன் உங்களை பார்த்துதான் உங்களின் மகன் வளருவான். அவனுக்காக கண்டிக்கிறேன்.
நான் கேலி செய்வேன், கிண்டல் செய்வேன், அசிங்கப்படுத்துவேன், இமிடேட் செய்வேன் என்னை மாற்றிக்கொள்ள மாட்டேன் என்றால், மக்கள் செய்ய வேண்டியதை செய்வார்கள்” என்றார்.

மேலும், “ஷிவினை நீங்கள் கிண்டலடித்த போதும், கிண்டல் செய்பவன் செய்து கொண்டுதான் இருப்பான் என்று அவர் எதிர்கொண்டவிதத்தை நான் பாராட்டுகிறேன்.
ஷிவின் மட்டும் இல்ல இவரை போல வெளியில் இருக்கும் பல சகோதரிகளுக்கும் என்ன மாதிரி ஒரு அண்ணன் இருப்பான்” என்று கமல் பேசியது உண்மையில் உணர்ச்சிப்பூர்வமாக இருந்தது.
பெயரால் வந்த குழப்பம்!
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக உள்ள கமல், கோபத்துடனும், ஆதங்கத்துடனும் ஒரு திருநங்கைக்கு ஆதரவாக பேசியது சமூகவலைதளங்களில் வைரலானது. கமலின் அந்த பேச்சை பலரும் பாராட்டினர்.
இந்நிலையில் ட்விட்டரில் எல்ஜிபிடிக்யூ சமூகத்திற்காக செயல்பட்டு வரும் மெளலி என்பவர், ஷிவினுக்கு ஆதரவாக அசீமை பங்கம் செய்த கமலை வெகுவாக பாராட்டினார்.
அவரது பதிவில், ”கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் திருநங்கைகள் குறித்து இமிடேட் செய்த அசீம் மற்றும் மணியிடம் கண்டிப்புடன் பேசியது பல வீடுகளைச் சென்றடைந்திருக்கும். அது நன்றாக இருந்தது.
கமல் அதோடு நிற்கவில்லை. மாறாக ADKவை மற்றவர்கள் பின்பற்றும்படி கேட்டுக் கொண்டார். மேலும் மற்றவர்களைப் பார்த்து சிரிப்பதற்கும், மற்றவர்களுடன் சேர்ந்து சிரிப்பதற்கும் உள்ள வித்தியாசத்தையும் காட்டினார். அது சக்தி வாய்ந்தது. டிவி ஒரு முக்கியமான ஊடகம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.” என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதற்கு பதிலளித்த கமல், ”நன்றி திரு. மௌலி. அநாகரிகமோ, அவமானமோ இல்லாமல் நகைச்சுவையைத் தூண்டிய தலைவர்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்குப் பிறகு நானும் பெருமைமிக்க மனிதர்களின் வரிசையைச் சேர ஆசைப்படுகிறேன்.” என்று கூறியிருந்தார்.
உண்மையில், தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், இயக்குநருமான மெளலி என்று நினைத்து பதில் அளித்திருந்தார்.

நன்றி தெரிவித்த கமல்!
இதனை புரிந்துகொண்ட ட்விட்டர் மெளலி, ”தவறான அடையாள நகைச்சுவைக்கு இதை நான் காரணம் கூறுகிறேன். ஆனால் எனது செய்தி உங்களை சென்றடைந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். அதேநேரத்தில், நீங்கள் தொடர்ந்து LGBTQ – சமூகம் – சினிமா ஆகிய துறையில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
தனது தவறான கணிப்பினை உணர்ந்த நடிகர் கமல்ஹாசன், ”இயக்குனரும், மூத்த நடிகருமான திரு. மெளலி என தவறாக நினைத்துவிட்டேன். இருந்தாலும், தங்களது பாராட்டுக்களுக்கு நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கமலுடன் பேசிய ட்விட்டர் மெளலிக்கு பலரும் தங்களது வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
தமிழகத்தில் கன மழை : அதிகபட்ச மழை பதிவானது எங்கே?
திருப்பதி இலவச தரிசனத்துக்கு கீழ் திருப்பதியில் மூன்று கவுன்ட்டர்கள்!