“சருமத்தைச் சிறப்பாக மெருகூட்ட, தினசரிப் பராமரிப்பு (Daily skincare routine) மிக அவசியம்’’ என்ற பியூட்டி தெரபிஸ்ட்ஸ்… இதுகுறித்து பகிரும் எளிய ஆலோசனைகள் இங்கே…
“சருமப் பராமரிப்புக்கு… க்ளென்ஸிங் (Cleansing), டோனிங் (Toning) மற்றும் மாய்ஸ்ச்சரைஸிங் (Moisturizing) ஆகிய மூன்றும் முக்கியமானவை. க்ளென்ஸர், முகத்தைச் சுத்தமாக்கும். டோனரை அப்ளை பண்ணும்போது சருமத் துவாரங்கள் மூடி இறுக்கமாகும். இதனால், நீங்கள் ஃபிரெஷ்ஷாக உணர்வீர்கள். மாய்ஸ்ச்சரைஸர், உங்கள் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும்.
கடைகளில் விற்கப்படும் தரமான க்ளென்ஸர், டோனர் மற்றும் மாய்ஸ்ச்சரைஸர் ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தும் அதே வேளையில், இடையிடையே வீட்டிலேயே கிடைக்கும் இயற்கையான க்ளென்ஸர், டோனர் மற்றும் மாய்ஸ்ச்சரைஸர் ஆகியவற்றையும் பயன்படுத்துவது சிறந்தது.
உதாரணமாக, மோர் ஒரு நல்ல க்ளென்ஸர். ரோஸ் வாட்டர் ஒரு சிறந்த டோனராக செயல்படும் தன்மை கொண்டது. பால் ஒரு நல்ல மாய்ஸ்ச்சரைஸராக செயல்படும் ஆற்றல் கொண்டது. எனவே, செயற்கை புராடக்ட்களை விடுத்து அவ்வப்போது இவற்றையும் பயன்படுத்தி வரலாம். பிரஷ் பண்ணுவது மற்றும் குளிப்பது போன்றவை எப்படி தினமும் செய்ய வேண்டிய வேலைகளோ, அதேபோல உங்கள் முகத்தை தினமும் க்ளென்ஸிங், டோனிங் மற்றும் மாய்ஸ்ச்சரைஸிங் செய்ய வேண்டியதும் அவசியமே. இதன்மூலம் முகச் சுருக்கங்கள் எதுவும் வராமல் முகம் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். மருக்கள் மற்றும் கருந்திட்டுகள் போன்றவை வராமலும் முகத்தைக் காக்க முடியும்.
வெளியே சென்றால் மறக்காமல் சன்ஸ்க்ரீன் பயன்படுத்துங்கள். குறிப்பாக, வெயிலில் நீங்கள் எவ்வளவு நேரம் இருக்கப் போகிறீர்களோ அதைப் பொறுத்து உங்கள் சன்ஸ்க்ரீனை வாங்கிக்கொள்ளுங்கள். குறைந்தபட்சம் SPF 15 உள்ள சன்ஸ்க்ரீனைப் பயன்படுத்தலாம். ஃபவுண்டேஷன் கலந்த சன்ஸ்க்ரீன் அல்லது மாய்ஸ்ச்சரைஸர் கலந்த சன்ஸ்க்ரீன் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.
40 வயதுக்கு மேற்பட்டவர்கள், நைட் க்ரீமை பயன்படுத்த மறக்காதீர்கள். ஏனென்றால், இதில் கொலாஜன், நிறைய புரதங்கள் மற்றும் வைட்டமின்கள் சேர்ந்திருக்கும். முகத்தைக் கழுவிவிட்டு நைட் க்ரீமை முகம் மற்றும் கழுத்தில் அப்ளை பண்ணிவிட்டு படுத்தால், காலையில் முகம் புத்துணர்வாக இருக்கும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, சருமம் மூப்படைவதைத் தள்ளிப்போடப்படும்.
கணினி, மொபைல் போன் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால் நம்மில் பலருக்கு கண்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுருக்கங்களும் கோடுகளும் வந்து அந்தப் பகுதி கருமையாக மாறிவிடுவதுண்டு. இப்படிப்பட்ட பிரச்சினை உள்ளவர்கள், பகல் நேரத்தில் அண்டர் ஐ ஜெல்/க்ரீம் (Under eye gel/cream) பயன்படுத்தலாம்.
வாரத்துக்கு ஒருநாள் தலைக்கு ஆயில் மசாஜ் எடுக்கலாம். எப்போதாவது, ஒரு தொழில்முறை ஸ்பா ட்ரீட்மென்ட்கூட எடுத்துக்கொள்வது சிறந்தது. அதேபோல, தலைக்கு தரமான ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் பயன்படுத்துங்கள். தலையில் அரிப்பு இருந்தால் முடி கொட்டும். எனவே,பொடுகுப் பிரச்னை இல்லாமல் தலையைப் பார்த்துக்கொள்ளுங்கள். இரண்டு நாள்களுக்கு ஒரு முறை தலைக்குக் குளித்து, சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.
நம் சரும ஆரோக்கியத்தைச் சிறப்பாக வைக்க, தினமும் இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் (சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நிலை காரணங்கள் உள்ளவர்கள், இதில் மருத்துவ ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்). உண்ணும் உணவில் புரதம் அதிகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கூடவே, கொஞ்சம் கார்போஹைட்ரேட், கொஞ்சம் கொழுப்பு ஆகியவை சேர்ந்த சமச்சீரான உணவை உண்ண வேண்டும்.
சமச்சீரான உணவானது கூந்தல் ஆரோக்கியம் மற்றும் சரும ஆரோக்கியம் ஆகிய இரண்டையும் பாதுகாக்கும் கவசம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதேபோல, தினசரி 7-8 மணிநேர தூக்கம் இருந்தால், நமது கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியம் நன்றாக இருக்கும். தினமும் அரைமணிநேரம் யோகா மற்றும் தியானம் செய்து வாழ்வைப் பதற்றமில்லாமல் அமைத்துக்கொண்டாலே உடலும் மனமும் அழகாகும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: சத்து மாத்திரைகள் சாப்பிடுபவரா நீங்கள்?
டாப் 10 நியூஸ் : அதிமுக போராட்டம் முதல் இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி போட்டி வரை!