1964ஆம் ஆண்டு ஏற்பட்ட புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட ஆழிப் பேரலையால் தமிழ்நாட்டின் தனுஷ்கோடி நகரம் அழிந்த சம்பவம் இன்னும் நீங்காத வடுவாக வரலாற்றில் பதிந்து நிற்கிறது.
மனிதர்கள் வாழ்வதற்கு தகுதியற்ற நகரமாக மாறிய தனுஷ்கோடி போல் தற்போது உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரம் சிறிது சிறிதாக மண்ணில் புதைந்து வருவது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் செல்லும் வழியில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஜோஷிமத் நகரம். இயற்கை எழில் கொஞ்சும் இந்நகரத்தில் ஏறக்குறைய 20 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள்.
புனித தலங்களான பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் போன்ற முக்கிய இந்து மற்றும் சீக்கிய மத தலங்களுக்கு இந்த நகரம் தான் நுழைவாயில்.
இது போன்ற ஏராளமான சுற்றுலாத் தலங்கள் இந்நகரைச் சுற்றி இருப்பதால் சுற்றுலா பயணிகளின் முக்கிய தலமாக இருக்கிறது.
இந்தியா – சீனா எல்லைக்கு அருகில் உள்ள முக்கிய இராணுவ தளங்களில் ஒன்றாக ஜோஷிமத் நகரம் உள்ளது.
இமயமலையில் இருந்து வரும் தவுலிங்கா, அலக்நந்தா ஆகிய இரு நதிகளும் ஜோஷிமத் நகரில் சங்கமித்து செல்கின்றன.
இப்படி மலைகளால், ஆறுகளால் நிரம்பிய ஜோஷிமத், அடிக்கடி நிலச்சரிவு, பூகம்பம் ஏற்படும் பகுதி என புவியியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

அதன்படி இந்நகரில் கடந்த சில நாட்களாக திடீரென நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. அதைத் தொடர்ந்து ஏராளமான வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன.
இங்குள்ள பல வீடுகள், கோவில்கள், அரசு கட்டிடங்கள் என பலவும் திடீரென மண்ணில் புதைந்துள்ளன.
இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதுடன் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
இதனால் 3 ஆயிரத்தும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் குடியிருக்க அச்சப்பட்டு வரும் பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.
இதனையடுத்து மக்களை மீட்கும் பணியில் அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆபத்தான பகுதியில் குடியிருக்கும் மக்களை ஹெலிகாப்டர் மூலம் வேறு இடத்துக்கு மாற்றும் பணியில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது.

வீடுகளை இழந்து புதிய வீடுகளில் குடியேறும் மக்களுக்கு அடுத்த 6 மாத வாடகையாக ரூ.4 ஆயிரத்தை உத்தரகாண்ட் அரசு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து வழங்க இருக்கிறது.
எனினும் உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படை தேவைகள் அனைத்தையும் இழந்து ஜோஷிமத்தில் வாழமுடியாத சூழல் நிலவுவதையடுத்து, ஏராளமான மக்கள், அரசு அலுவலகங்கள் முன் நேற்றிலிருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ஆபத்தான இடத்தில் உள்ள 600 குடும்பங்களை அவசர அவசரமாக வெளியேற்றும் பணியில் உத்தரகாண்ட் அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும் புதைந்து வரும் ஜோஷிமத் நகரத்தின் பாதிப்புகள் மற்றும் நிலவரம் குறித்து ஆய்வுசெய்ய பல்வேறு சிறப்பு வல்லுநர்கள் குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது.

இதுகுறித்து உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் தாமி நிருபர்களிடம் கூறுகையில் “ இப்போதுள்ள சூழலில் மக்களின் உயிரைக் காப்பதே எங்கள் முதல் முன்னுரிமை. ஆதலால் ஜோஷிமத்தில் இருந்து மக்களை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரம் காட்டுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். மேலும் உடனடி மற்றும் நீண்ட கால செயல் திட்டங்களை உடனடியாக தயாரிக்க வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.
ஜோஷிமத் நகரம் மண்ணுக்குள் புதைந்து வருவதை தொடர்ந்து ஆசியாவின் மிகப்பெரிய மலை ரோப்வே, அதன் அடியில் ஏற்பட்ட பெரிய விரிசல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சார்தம் சாலைத் திட்டம், என்டிபிசியின் நீர்மின்சாரத் திட்டம் போன்ற மெகா திட்டங்கள் தொடர்பான அனைத்து கட்டுமான பணிகளும் பொதுமக்களின் கோரிக்கையின் பேரில் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் இதுவரை பாதிக்கப்பட்ட பொதுமக்கள், உயிரிழப்புகள் குறித்த சரியான தகவல்கள் இதுவரை வெளிவரவில்லை.
எனினும் இந்த இயற்கை பேரிடருக்கு காலநிலை மாற்றம் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு மேம்பாடுகள் ஆகியவை இல்லாததே இதற்கு காரணம் என்று உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர்.
மனித செயல்பாடும் மற்றும் காலநிலை மாற்றம் ஆகிய இரண்டும் தொடர்பான பல்வேறு காரணிகள் ஜோஷிமத் அழிவுக்கு வழிவகுத்தன என்று நிபுணர்கள் வாதிடுகின்றனர்.
அதே வேளையில் இந்த காரணிகள் எல்லாம் இப்போது ஏற்பட்டவை அல்ல. அவை நீண்ட காலமாக கட்டமைக்கப்பட்டவை என்று வாடியா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹிமாலயன் ஜியாலஜியின் இயக்குனர் கலாசந்த் சைன் கூறியுள்ளார்.
60 ஆண்டுகள் கடந்தும் மனதில் நீங்காது பல உயிர்களையும், உடைமைகளை தன்னுள் விழுங்கி கொண்ட தனுஷ்கோடியை, தற்போது உத்தரகண்ட்டின் ஜோஷிமத் நகரம் நியாபகப்படுத்துவதாக உள்ளது என்பதே மறுக்க முடியாத உண்மை.
கிறிஸ்டோபர் ஜெமா