பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சிறப்பு பரிசாக டி சர்ட் வழங்கியுள்ளார்.
அமெரிக்காவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக சென்ற பிரதமர் மோடி நேற்று (ஜூன் 23) வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்தியா அமெரிக்கா தொழில்நுட்ப நல்லுறவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மகேந்திரா குழும தலைவர் ஆனந்த் மகேந்திரா, ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, “கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருகிறது.
திறமையும் தொழில்நுட்பமும் ஒன்றிணைவது பிரகாசமாக எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.
இந்தியா மற்றும் அமெரிக்காவின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் வளர்ச்சி ஏற்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசும்போது, “இந்தியா, அமெரிக்கா நல்லுறவு என்பது இரு நாட்டு மக்களுக்கானது மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கானதாகும்.
காலநிலை மாற்றத்தை சமாளிப்பது, ஆராய்ச்சியில் ஈடுபடுவது, மக்களை வறுமை நிலையிலிருந்து மீட்டெடுப்பது, தொற்று நோய்களை தடுப்பது போன்ற நடவடிக்கைகளில் அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் பிரதமர் மோடிக்கு அதிபர் ஜோ பைடன் சிறப்பு பரிசாக டி சர்ட் வழங்கினார்.
அதில், “இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்காலம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்” என்ற வாசகம் அச்சிடப்பட்டிருந்தது.
இந்த புகைப்படத்தை தனது ட்விட்டரில் பிரதமர் மோடி பகிர்ந்து, “இந்தியா மற்றும் அமெரிக்கா வலிமையாக உள்ளது. இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும் போது இந்த உலகம் சிறப்பானதாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக அதிபர் ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி விநாயகர் சிலை உள்ள சந்தனப்பெட்டியும் ஜில் பைடனுக்கு வைரக்கல்லும் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
சிறுவனை இழுத்து சென்ற சிறுத்தை சிக்கியது!
“இந்தியா டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 10 பில்லியன் டாலர் முதலீடு” – சுந்தர் பிச்சை