வேறெங்குமே சாப்பிடக் கிடைக்காத பிரத்யேக உணவு வகைகள் இஸ்லாமியத் திருமணங்களில் பரிமாறப்படுவது வழக்கம். அவற்றில் ஒன்று இந்த ஜாளர்.
இதை நீங்களும் செய்து வீட்டிலுள்ளவர்களை அசத்தலாம். மைதா மாவுக்குப் பதிலாக கோதுமை மாவிலும் இதைச் செய்யலாம். நான் வெஜ் அல்லது வெஜ் கிரேவி மற்றும் குருமாவுடன் பரிமாறலாம்.
என்ன தேவை
மைதா – 500 கிராம்
தண்ணீர் – 250 மில்லி
தேங்காய்ப்பால் – 250 மில்லி
பெருஞ்சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
நெய் – 100 மில்லி
எப்படி செய்வது
மைதாவை கட்டி இல்லாமல் சல்லடையால் நன்கு சலித்து வைத்துக் கொள்ளவும். பின்னர் அதில் தண்ணீர், தேங்காய்ப்பால், பெருஞ்சீரகத்தூள் ஆகியவற்றைச் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்துவைத்துக் கொள்ளவும்.
இந்த மாவுக் கலவையை மூன்று அல்லது நான்கு துளையிட்ட ஜாளர் குவளையில் ஊற்றிக் கொள்ளவும். தோசைக்கல்லில் சிறிது நெய் தடவி சூடாக்கி ஜாளர் குவளையில் எடுத்துக்கொண்ட மாவை ஜிலேபி சுற்றுவது போல் தோசைக்கல் முழுவதும் சுற்றவும்.
ஜாளர் வெந்ததும் தோசை திருப்பியைக் கொண்டு கிழியாமல் எடுக்கவும். பின்னர் இதை நான்காக மடித்துப் பரிமாறவும்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: நெய்ச் சோறு